அம்பாறை ஆலையடிவேம்பில் பிரதேசத்தை பாதுகாக்க கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்

தமது பிரதேசத்தில் நடைபெறும் வன்முறைகளை நிறுத்தக்கோரி அம்பாறை மாவட்டம் செயலாளர் பகுதியில் அமைந்துள்ள ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவு மக்கள் இன்று காலை  கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலையடிவேம்பு பிரதேசத்தில் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் குற்ற செயல்களும் வன்முறைகளும் , பாடசாலை மாணவர்கள் நோக்கியதான போதைபொருள் விற்பனையும் பொது மக்களது  பாதுகாப்பையும் அடிப்படை உரிமைகளையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

அண்மைக்காலமாக  பிரதேசத்தில் பல கொள்ளைச் சம்பவங்கள் சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்த வண்ணமுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக் காட்டினர்.

1 ) எமது பிதேசத்தில் வாழும் நீதிபதி ஒருவரது வீட்டில் இடம் பெற்ற கொள்ளைச் சம்பவம் .

2 ) நீதிமன்ற ஆவணங்களை அழிக்கும் போக்கில் பதிவறை தீ வைக்கப்பட்டமை

3 ) எமது பிரதேச செயலாளருக்கு நேரடியாக கொலை அச்சுறுத்தல் விடுத்தமை .

4 ) பாடசாலை ஆசிரியர்கள் மீதான கொலை அச்சுறுத்தல்

 5 ) சூதாட்ட விடுதிகள் அதிகரிப்பு 

இவ்வாறான பல சம்பவங்கள்  பிரதேசத்தில் தொடர்ச்சியாக ஏற்பட்ட வண்ணம் உள்ளமை எமது பாதுகாப்பை கேள்விக் குறியாக்கியுள்ளக தெரிவித்தனர்.

மேலும் சிவில் பாதுகாப்பு தொடர்பான மக்களின் நம்பிக்கையையும் சீர் குலைந்துள்ளாகவும் மேற்படி சம்பவங்களை தடுக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்காமை மற்றும் குற்றச் செயல்கள் தொடர்பில் பொலிசார் முறையான புலன் விசாரணைகளை மேற்கொண்டு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்து சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக வழக்குகளை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டனர்.

அத்துடன் எமது பிரதேசத்தில் சில குறிப்பான இடங்களில் சூதாட்ட மையங்கள் இயங்கி வருவது தொடர்பில் பொலிஸார் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் எனவும் தெரிவித்தனர். 

எனவே பொலிஸ் உயர் அதிகாரிகள் எமது பிரதேசத்தில் அக்கறை கொண்டு   விடயம் தொடர்பில் முழுமையான கவனத்தை செலுத்தி சட்டவிரோத செயல்களை தடுத்து எமது பிரதேசத்தை பாதுகாக்குமாறு தெரிவித்தனர்.

குறித்த விடையங்கள் உள்ளடங்கிய மகஜர் ஒன்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளரிடம் ஆர்ப்பாட்டகாரர்களினால் கையளிக்கப்பட்ட மை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில்

சிவில் பாதுகாப்பு அமைச்சர்

நீதிச் சேவை ஆணைக்குழு

பொலிஸ் சேவை ஆணைக்குழு

பொலிஸ்மா அதிபர்

கட்டளை தளபதி (எஸ்.ரி.எப்)

பொலிஸ் சேவை ஆணைக்குழு -கி.மா

அரசாங்க அதிபர் அம்பாறை

சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் - கி.மா

பிரதி பொலிஸ் மா அதிபர் - அம்பாறை

ஏ.எஸ்.பி - அக்கரைப்பற்று

ஓ.ஐ.சி அக்கரைப்பற்று

ஆகியோருக்கு குறித்த  விடையங்கள் கடிதம் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

(அலுவலக செய்தியாளர்)








No comments: