"முரசு" புயலால் வட கிழக்கில் நவம்பரில் மழை

மத்திய வங்காள விரிகுடாவில் காணப்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது ஒரு புயலாக மாற்றமடைந்துள்ளது. 

இதற்கு 'முரசு' எனப் பெயரிடப்பட்டுள்ளது. 

இதுவே 1976ம் ஆண்டின் பின்னர் ஒரு புயலுக்கு வழங்கப்படும் முழுமையான தமிழ்ப் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இது இந்தியாவினால் வழங்கப்பட்டது. 2004ம் ஆண்டின் பின்னரே புயல்களுக்கு பெயர் வைக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு முதல் அது கரை கடந்த இடத்தின் பெயரால் அழைக்கப்பட்டது. 

இந்த புயல் எதிர்வரும் 03.11.2026 அதிகாலை இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின் தெற்கே உள்ள 'காவலி' என்ற இடத்திற்கருகில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த புயலின் காரணமாக இலங்கையின் எந்த ஒரு பகுதிக்கும் நேரடியாக எந்தப் பாதிப்பும் கிடையாது.

ஆனால் இந்தப் புயல் கரையை அண்மிக்கும் போது ஈரலிப்பான காற்றை அரபிக்கடலில் இருந்து இலங்கை ஊடாக மையம் நோக்கி ஈர்க்கும் போது இலங்கையின் பல பகுதிகளுக்கும் பரவலாக மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. 

அந்த வகையில் நாளை 02.11.2026 முதல் 06.11.2026 வரை வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் பல பகுதிகளுக்கும் பரவலாக மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. 

வடக்கு மாகாணத்தில் நாளை முதல் அடுத்த நான்கு நாட்களிலும் (02.11.2026 முதல் 06.11.2026) பரவலாகா ஒரு சில மணி நேரம் மிதமானது முதல் சற்றுக் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. 

கிழக்கு மாகாணத்திலும் நாளை முதல் அடுத்த நான்கு நாட்களிலும் (02.11.2026 முதல் 06.11.2026) பரவலாகா ஒரு சில மணி நேரம் மிதமானது முதல் சற்றுக் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக அம்பாறை மாவட்டத்தின் உள் நிலப்பகுதிகளில் சற்றுக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. 

மத்திய மாகாணத்தில் நாளை முதல் (02.11.2026) எதிர்வரும் 05.11.2026 வரை பரவலாக மூன்று மாவட்டங்களிலும் அவ்வப்போது மிதமான மழையுடன் சில மணி நேரங்கள் கனமழையும் கிடைக்க வாய்ப்புள்ளது. 

சப்ரகமுவா மாகாணத்திலும் நாளை முதல் (02.11.2026) எதிர்வரும் 05.11.2026 வரை மிதமானது முதல் சற்றுக் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. 

ஊவா மாகாணமும் நாளை முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு அவ்வப்போது மிதமான மழையுடன் இடையிடையே கனமான மழையும் பெறும் வாய்ப்புள்ளது. 

மேல் மாகாணத்தில் குறிப்பாக கொழும்பு மாவட்டத்தில் நாளை முதல் எதிர்வரும் 04.11.2026 வரை அவ்வப்போது செறிவான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. 

வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் எதிரவரும் நாட்களில் (02.11.2026 - 06.11.2026) பரவலாக மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

குறிப்பாக இந்த மழை தொடர்மழையாக அல்லாது சில மணி நேரங்கள் மட்டுமே கிடைக்கும். ஏனைய நேரங்களில் வெயில், மேகமூட்டமான வானம், என குழப்பமான வானிலைக் கோலங்கள் காணப்படும். 

அத்தோடு இந்த மழை அதிகளவிலான இடி மின்னல் நிகழ்வுகளோடு கூடியதாகவே அமையும் என்பதனால் மக்கள் இடி மின்னல் நிகழ்வுகள் தொடர்பில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

சப்ரகமுவா, மத்திய, ஊவா மாகாணங்களில் ஏற்கனவே போதுமான மழை கிடைத்து நிலம் நிரம்பிய நிலையில் இருப்பதனால் எதிர்வரும் நாட்களில் கிடைக்கும் சற்றுக் கனமழை கூட சிறிய அளவிலான வெள்ள அனர்த்தத்தை ஏற்படுத்தக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அத்தோடு இந்த மாகாணங்களில் நிலச்சரிவு நிகழ்வுகள் ஏற்படவும் வாய்ப்புக்கள் உண்டு. 

எனவே இவை தொடர்பாக மக்கள் மிக அவதானமாக இருப்பது சிறந்தது. 

அதேவேளை வடக்கு மற்றும் கிழக்கு கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படுகின்றன. எனவே முன்னர் குறிப்பிட்டவாறு எதிர்வரும் 03.11.2026 மாலை வரை மீனவர்கள் கடலுக்கு செல்வதைத் தவிர்ப்பது சிறந்தது. 

- நாகமுத்து பிரதீபராஜா -




No comments: