இலங்கை கிரிக்கெட்டின் பதிவு ரத்து?
அண்மையில் நிறைவடைந்த இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டியின் போது இலங்கை அணியில் " மதப் பிரிவொன்றின்" தாக்கம் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை சட்டமா அதிபர் ஆய்வு செய்து வருவதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திரு.சுமதி தர்மவர்தன இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி டி சில்வா மற்றும் ஸ்ரீலங்கா கிரிக்கட் செயலாளர் மொஹான் டி சில்வா ஆகியோர் தாக்கல் செய்த மனுவின் போது, பதிவு ரத்து செய்யப்படுவதை தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த விசாரணை அறிக்கை நேற்று சட்டமா அதிபருக்கு கிடைத்துள்ளதாகவும், சட்டமா அதிபரால் அறிக்கையின் உள்ளடக்கம் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுமதி தர்மவர்தன நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் பின்னர் சட்டமா அதிபர் விளையாட்டுத்துறை அமைச்சரிடம் தனது நிலைப்பாட்டை அறிவிப்பார் என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, மனுவை பெப்ரவரி முதலாம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த அவுஸ்திரேலிய டுவென்டி 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் போது இலங்கை அணியில் "போன் அகைன்" மதப் பிரிவின் தாக்கம் குறித்து விசாரணை நடத்த முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி சரோஜினி குசலா வீரவர்தன தலைமையிலான குழுவை விளையாட்டுத்துறை அமைச்சர் நியமித்ததாக மனுதாரர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த குழு விசாரணைகளை நடத்தி அதன் அறிக்கையை விளையாட்டுத்துறை அமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் உள்ள உண்மைகளின் அடிப்படையில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பதிவை இரத்துச் செய்வதைத் தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு மனுதாரர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments: