பயணக்கட்டுப்பாட்டால் வெத்திலைச் செய்கையாளர்கள் பாதிப்பு !

 செ.துஜியந்தன் ' 

அடிக்கடி பணக்கட்டுப்பாடு போடுறத்தால எங்களால தொழில் செய்ய முடியாமக்கிடக்குது. எங்கட வெத்திலையெல்லாம் கொடியோடு கிடந்து முற்றிப்போகுது. முந்திய மாதிரி வெத்திலை விற்குதில்லை. காலங்காலமாக இந்த வெத்திலைச் செய்கையை நம்பித்தான் எங்கட குடும்ப சீவியம் போகுது. இந்தக் கொரோனா கிருமி வந்தபிறகு வெத்திலையை விற்கிறத்தக்கு வியாபாரிகள் யாரும் வாறாங்கயில்லை. 

ஒரு வெத்திலைத்தோட்டத்தை உருவாக்குவதற்க்கு ரெண்டு இலட்சம் ரூபா வரைக்கும் செலவாகுது. ஆனால் அந்தளவிற்கு எங்களுக்கு வருமானம் கிடைக்கிறதில்லை. அரசாங்கம் மற்றப்பயிர்களுக்கு உதவி செய்யிறமாதிரி எங்களுக்கும் உதவி செய்யவேணும்' என்றார் கடந்த முப்பதுவருடங்களுக்கு மேலாக வெத்திலைச் செய்கையில் ஈடுபட்டுவரும் குணம் என்பவர்.

 மட்டக்களப்பு மாவட்டத்தில் வெத்திலைச் செய்கைக்குப்பேர்போன இடமாக களுதாவளைக் கிராமம் விளங்குகின்றது. களுதாவளையில் உற்பத்தி செய்யப்படும் வெத்திலைக்கு என்று நாட்டின் பலபாகங்களிலும் தனி கிராக்கியுள்ளது. களுதாவளையில் 600 இற்கும் மேற்பட்டவர்கள் வெத்திலைத்தோட்டம் செய்வதில் ஈடுபட்டுள்ளனர்.

 தற்போதைய விலை வாசியில் அனைத்துக்கும் விலை ஏறிவிட்டது. வெத்திலைத்தோட்டம் அமைப்பது தொடக்கம் அதன் அறுவடைவரையான காலப்பகுதிவரை இரண்டு இலட்சம் ரூபா செலவளிக்கப்படுவதாக விவசாயிகள் கூறுகின்றனர். 

 இரண்டாயிரம் கொழுந்துகள் நட்டால் அதில் இருந்து இரு நூறு பகளி வெத்திலைகளை பறிக்கமுடியும். தோட்டங்களுக்கு வருகைதரும் வியாபாரிகள் குறைந்த விலைக்கே வெத்திலையைப் பெற்றுச் செல்கின்றனர்.

 இதனால் உற்பத்தியாளர்களை விட நுகர்வோரே அதிக லாபம் பெறுவதாகவும் கவலை தெரிவிக்கின்றனர். களுதாவளை வெத்திலை உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச்சங்க தலைவர் அருள்நிதி இப்படிக்கூறுகின்றார்.. '

முந்தியெண்டால் எங்கட தோட்டத்துக்கு வந்து வெத்திலையை வாங்கிட்டுப்போறத்துக்கு தூர இடங்களில இருந்து வியாபாரிகள் வருவாங்க. இப்ப இந்தக் கொரோனா வந்தபிறகு வியாபாரிகள் வாறதும் குறைஞ்சிட்டுது. 

எங்களுக்கு வெத்திலையை விற்கிறத்துக்கு ஒரு சந்தை வாய்ப்பையும், தோட்;டம் செய்யிறத்துக்கு பண உதவியும் அரசாங்கம் செய்துதந்தா எங்கட வெத்திலைச் செய்கையை மேலும் விருத்தி செய்யமுயும். 

அதுபோல வெத்தலைக் கொடியை படரவிடுவதற்கான காடுகளில் வெட்டப்படும் நீண்ட உயரம் உடைய அலம்பல் (கம்பு) வெட் டுவதற்க்கும் அதனைக் கொள்வனவு செய்வதற்க்கும் வனபாதுகாப்பு பிரிவினர் அனுமதி வழங்க வேண்டும்.

 வெத்திலைக்குரிய பங்கசு கிருமி நாசினிக்கும் பெரும் தட்டுப்பாடாக இருக்கிறது. இந்த கொரோனா கிருமிக்குக் பிறகு வெத்திலை விற்குதி;ல்லை. பரம்பரையாக செய்துவருகிற தொழிலையும் விடமுடியாது. ரொம்ப கஸ்டப்படுறம்' என்றார். களுதாவளை வெத்திலைச் செய்கையாளர்கள் எதிர்நோக்கும் பின்வரும் பிரச்சினைகள் தீர்த்துவைக்கப்படவேண்டும் என்பதே அவர்களின் வேண்டுகோளாக இருக்கின்றது. 

ஏனைய பயிர்களைப்போன்று வெத்திலைச் செய்கையினை அங்கிகரிக்கப்பட்ட பயிர்ச்செய்கையாக அரசாங்கம் அறிவிக்கவேண்டும். உற்பத்தி செய்யப்படும் வெத்திலைகளை உடனுக்குடன் சந்தைப்படுத்தும் சந்தை வாய்ப்பினை உருவாக்கி கொடுக்கவேண்டும். இடர் காலங்களில் வாகன வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவேண்டும். 

விவசாயிகளுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் இவர்களுக்கும் பெற்றுக் கொடுக்கப்படவேண்டும், வங்கிகளில் வெத்திலைச் செய்கைக்கென கடன் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவேண்டும், வறுமையில் வாடும் வெத்திலைத் தோட்டச் செய்கையாளர்களுக்கு மானிய அடிப்படையில் வாழ்வாதார உதவிகள் வழங்கப்படவேண்டும், வெத்தலையை படரவிடுவதற்கென காடுகளில் வளரும் அலம்பல் கம்புகள் தங்குதடையின்றி வெட்டி கொண்டுவருவதற்கான அனுமதி வழங்கப்படவேண்டும். 

போன்ற இன்னும் பல வேண்டுகோள்களை செய்கையாளர்கள் முன் வைக்கின்றனர். வெத்திலை என்பது தமிழ் சிங்கள மக்களின் பாரம்பரிய சமய, சமூக மற்றும் மங்கல, அமங்கல விழாக்களுக்கு எடுக்கப்படுகின்ற பொருளாகவே இருக்கின்றது. 

என்னதான் மங்களப்பொருளாக வெத்திலை பார்க்கப்பட்டாலும் தற்போதைய காலத்தில் போதைப்பொருட்களில் ஒன்றாகவும் இது பேசப்படுகின்றது. அதனால் வெத்திலைச் செய்கையாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கும் உள்ளாகிவருகின்றனர். ஏனைய பயிர்ச்செய்கையாளர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள், வசதிவாய்ப்புக்களை வெத்திலைச் செய்கையாளர்களுக்கும் வழங்கவேண்டும் என்பதே இவர்களின் வேண்டுகோளாகும்.

Post a Comment

0 Comments