பயணக்கட்டுப்பாடு தொடர்பில் ஜனாதிபதியின் முக்கிய தீர்மானங்கள் !இன்று தொடங்கும் பயண கட்டுப்பாட்டு நடைமுறை காலத்திற்கான அரசாங்கத்தின் புதிய தீர்மானங்கள்:

கோவிட் தொற்று நோயை கட்டுப்படுத்துவதற்காக இன்று (21) இரவு 11.00 மணி முதல் பயணக்கட்டுப்பாட்டை விதிக்கும் போது மக்களுக்கும் பொருளாதாரத்திற்கும் பாதிப்பு ஏற்படாதிருக்க பல தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளன.

கோவிட் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியுடன் இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து  ஜனாதிபதி முக்கிய விடைங்களை எடுத்துள்ளார்.

பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் காலப்பகுதியில் 

தொழிற்சாலைகளை தொடர்ச்சியாக நடத்திச் செல்லுதல், மருந்தகங்களை திறந்து வைத்தல், பேக்கரி உற்பத்திகளை தொடர்ச்சியாக மேற்கொள்ளுதல் மற்றும் விநியோகிப்பதற்கு முறைமையொன்றை வகுத்தல் என்பவற்றோடு கப்பல் பொருட்களை விநியோகிக்கும் நிறுவனங்களை திறந்து வைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

பிரதேச ரீதியாக நடமாடும் சேவைகளை மேற்கொண்டு எவ்வித தட்டுப்பாடும் இன்றி அத்தியாவசியப உணவுப் பொருட்களை மக்களுக்கு விநியோகிப்பதற்கும் தொடர்புபட்ட துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டுக்கு சட்ட விரோதமாக்க் கொண்டுவரப்பட்டு அரசுடைமையாக்கப்பட்டுள்ள அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களை சதோச நிறுவனத்திற்கு வழங்குவதற்கும், நாடளாவிய ரீதியில் உள்ள சதோச களஞ்சிய சாலைகளில் மேற்கொள்ளப்படும் பொருள் பொதியிடல் வேலைகளுக்கு ஒரு லட்சம் தொழில் வாய்ப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்களைப் பயன்படுத்துவதற்கும் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்காக பிரதேச செயலாளர்களின் ஊடாக தேவையான அனுமதிப் பத்திரங்களை வழங்குவதற்கும், வீதித் தடை நடவடிக்கைகளை இளகுபடுத்துவதற்கு காவற்துறை மற்றும் இராணுவத்தினரை பயன்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார மத்திய நிலையங்கள் திறக்கப்படும் நாளுக்கு முந்திய தினம் பொருட்களை கொண்டு செல்வதற்காக அனுமதியளித்தல், விவசாய நடவடிக்கைகள், அனைத்து நகரங்களிலும் குப்பைகளை அகற்றுதல் உள்ளிட்ட நாளாந்த சுத்திகரிப்பு நடவடிக்கைகள், வீதி அபிவிருத்தி மற்றும் ஏனைய நிர்மாணப் பணிகளை முன்னெடுத்தல் போன்றவற்றுக்கு இந்த பயணக் கட்டுப்பாட்டை தடையாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார்.

பீ சீ ஆர் பரிசோதனை மேற்கொள்ளும் அரச அல்லது தனியார் நிறுவனங்கள் பரிசோதனை பெறுபேறுகளின் படி தொற்றாளர்களை இனம்காணும் பட்சத்தில் குறித்த தொற்றாளருக்கு சிகிச்சையளிக்கும் பொறுப்பை அந்த நிறுவனத்திற்கே நேரடியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி அவர்கள் சுகாதார அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் போது ஆயுர்வேத வைத்திய சாலை முறைமை வசதிகளையும் பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மே மாதம் 25 மற்றும் 28 ஆகிய இரு தினங்களிலும் பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்டாலும் மக்களுக்கு வீட்டிலிருந்து வெளியில் செல்வதற்கு அனுமதி வழங்கப்படுவது அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மட்டுமேயாகும்.

சில வெளிநாடுகளில் இருந்து தருவிக்கப்படவுள்ள தடுப்பூசிகள் இன்னும் சில நாட்களில் எமது நாட்டை வந்தடையவுள்ளன.

தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளை விரைவுபடுத்தி தற்போதிருக்கும் நிலைமையை விரைவாக கட்டுப்படுத்த வேண்டிய தேவையை நான் வலியுறுத்தியுள்ளேன்.

அரச அதிகாரிகள் மற்றும் பொறுப்புக் கூற வேண்டியவர்கள் தேவையற்ற விதத்தில் ஊடகங்களில் மட்டும் வந்து மக்களைப் பயமுறுத்துவதற்குப் பதிலாக ஏதேனும் விடயங்கள் இருந்தால் அது பற்றி நேரடியாக என்னிடமே தெரிவிப்பதே நாட்டுக்கு நன்மைகளைத் தரும்.

இதுவரை எடுக்கப்பட்ட தீர்மானங்களும், இதன் பின்னர் எடுக்கப்படவுள்ள தீர்மானங்களும் துறைசார் சிறப்பு நிபுணர்களின் ஆலோசனகளின் பிரகாரமே ஆகும்.

மக்களுக்காக எந்தவொரு சரியான தீர்மானத்தையும் எடுப்பதற்கு, எவருக்காகவும் நான் பின்நிற்கப் போவதில்லை.

அரசாங்கம் தனது கடமைகளைச் செவ்வனே செய்துகொண்டேயுள்ளது. ஆனால் -
நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த வேண்டுமெனில், அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்களை வெற்றி பெறச் செய்வதற்கு, சுகாதார துறை வழங்கியுள்ள வழிகாட்டல்களை, சரியான முறையில், பொறுப்புடனும் கடமையுணர்வுடனும் மக்கள் பின்பற்ற வேண்டும் என்பதே அவசியமானது.

Post a Comment

0 Comments