நடிகர் விவேக் மறைவுக்கு திரையுலகினர் செலுத்திவரும் புகழஞ்சலி


சிரிப்பும் சிந்தனையும் கலந்த நகைச்சுவையை திரையில் பரப்பி 'சின்னக் கலைவாணர்' என கொண்டாடப்பட்டவர் நடிகர் விவேக். திடீரென ஏற்பட்ட அவரது மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அவரது மறைவுக்கு திரையுலகினர் செலுத்திவரும் புகழஞ்சலிக் குறிப்புகளிலிருந்து...

நடிகர் ரஜினிகாந்த்: ''சின்னக் கலைவாணர் விவேக் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. 'சிவாஜி' படப்பிடிப்பில் அவருடன் நடித்த ஒவ்வொரு நாளும் என் வாழ்க்கையின் மறக்க முடியாத நாட்கள்.''

நடிகர் கமல்ஹாசன்: "நடிகனின் கடமை நடிப்பதோடு முடிந்தது என இருக்காமல் சமூகத்துக்கு ஏதேனும் செய்ய விரும்பியவர் விவேக். கலாமின் இளவலாக, பசுமைக் காவலராக வலம்வந்த விவேக்கின் மரணம் தமிழ்ச் சமூகத்திற்கு பேரிழப்பு."

கவிஞர் வைரமுத்து: அய்யோ! சிரிப்பு செத்துவிட்டதே!

எல்லாரையும் சிரிக்கவைத்த கலைஞன்

அழவைத்துவிட்டுப் போய்விட்டானே!

திரையில் இனி பகுத்தறிவுக்குப்

பஞ்சம் வந்துவிடுமே!

மனிதர்கள் மட்டுமல்ல விவேக்!நீ நட்ட மரங்களும் உனக்காக

துக்கம் அனுசரிக்கின்றன.

லைச் சரித்திரம் சொல்லும்.

நீ 'காமெடி'க் கதாநாயகன்.

சாலமன் பாப்பையா: "பொதுப் பணிகளில் ஆர்வம் மிகுந்த எனது மாணவரான நடிகர் விவேக்கின் இழப்பு ஈடு செய்ய இயலாதது."

நடிகர் நாசர்: "அவர் நட்ட பல லட்சம் மரங்கள் கூட அவரை நினைத்து வாடும்!"

நடிகர் பிரகாஷ் ராஜ்: "எண்ணங்கள் மற்றும் மரங்களை நட்டமைக்கு நன்றி"

நடிகர் யோகி பாபு: "விவேக் நல்ல நடிகர் மட்டுமல்ல; நல்ல மனிதர். அவரை நாம் இழந்துவிட்டோம்."

நடிகர் பார்த்திபன்: "நடிகர் விவேக்கின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு; அவரது மரணம் அதிர்ச்சியை அளிக்கிறது."

இயக்குநர் சேரன்: "திரை உலகம் உள்ளவரை உங்கள் புகழ் இருக்கும்; எல்லோர் இதயங்களிலும் வாழ்வீர்கள், விவேக் சார்!"

நடிகர் சூரி: "நடிகர் விவேக் காமெடியன் கிடையாது. அவர் உண்மையான ஹீரோ. அவருக்கு இந்த நிலை வந்திருக்க கூடாது. இந்த உலகம் இருக்கும் வரை அண்ணன் விவேக் இருக்க வேண்டும்."

நடிகர் விக்ரம்: "என்மீது அளவற்ற அன்பு கொண்டவரும், எனது நெருங்கிய நண்பருமான மாபெரும் கலைஞன் விவேக்கின் மரணச் செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சி அடைந்தேன். தனிப்பட்ட முறையில் எனக்கும், தமிழ் திரைப்பட உலகிற்கும் மாபெரும் இழப்பு."

நடிகர் செந்தில்: "விவேக் திறமையான மனிதர், அருமையான நடிகர். எம்.ஆர்.ராதா போல் தத்துவங்களை பேசி சினிமாவுக்கு வந்தவர்."

கோவை சரளா: "மனிதநேயம் மிக்க மனிதர் விவேக்."

நடிகர் கணேஷ் வெங்கட்ராம்: 'பாசிட்டிவ் எனர்ஜி' கொடுப்பவர் விவேக். ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு அடையாளமாக இருந்தார்.

நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்: "சமுதாயப் பணிகள் பற்றி அதிகம் பேசக்கூடியவர் விவேக்."

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்: "விவேக்கின் மறைவை நம்ப முடியவில்லை."

மயில்சாமி: "தர்மம் செய்வதில் எம்ஜிஆர் போன்றவர் விவேக். ஏழைக்குழந்தைகளின் கல்விக்கு உதவியவர்."

நடிகர் தாமு: "மிகப்பெரிய சமூக அக்கறை உள்ள பொதுநலவாதி."

இயக்குநர் சிங்கம்புலி: "விவேக் நட்ட மரங்கள் ஆக்சிஜனை கொடுக்காமல் அவரை கைவிட்டது. சினிமா மூலமாக விவேக் எப்போதும் கூடவே இருப்பார்."

நடிகர் வையாபுரி: "தமிழ் திரைத்துறையே நடிகர் விவேக்கை இழந்துள்ளது."

பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன்: "நான் குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்க காரணமானவர் விவேக்."

நடிகர் அனு மோகன்: "விவேக்கின் மறைவு இந்திய திரையுலகிற்கே மாபெரும் இழப்பு"

No comments: