மாயமான இந்தோனேசிய நீர்மூழ்கி கப்பல் - ஒட்சிசன் கையிருப்பு நாளை அதிகாலை வரையே போதுமானது


53 பேருடன் காணாமல் போன இந்தோனேசிய நீர் மூழ்கியில் ஒட்சிசன் கையிருப்பு அதில் உள்ளவர்களுக்கு நாளை அதிகாலை வரையே போதுமானது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்நீர்மூழ்கி கப்பல்,இந்தோனேசியாவின் பாலி தீவின் வடபகுதியில் புதன்கிழமை காலை பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது.ஆனால் அது திரும்பி வரவில்லை எனவும்,அந்நீர்மூழ்கியுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

KRI Nangala 402 எனும் இந்நீர்மூழ்கி கப்பலை கண்டுபிடிப்பதற்கு யுத்த கப்பல்கள் அனுப்பப்பட்டுள்ளன.பாலி தீவின் கரையோரத்திலிருந்து 100 கிலோமீற்றர் தொலைவில் புதன்கிழமை காலை இந்நீர்மூழ்கி காணமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

"கடற்படை தற்போது அந்த நீர்மூழ்கிக் கப்பல்லை தேடிக் கொண்டிருக்கிறது. கப்பல் காணாமல் போன பகுதி குறித்து நாங்கள் அறிவோம். அப்பகுதி கொஞ்சம் அதிக ஆழமானது" என முதல் நிலை அட்மிரல் ஜூலியல் விட்ஜோஜோனோ குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இந்நீர்மூழ்கியிலுள்ள ஒட்சிசன் வாயு கையிருப்பு நாளை அதிகாலை 3.30 மணிவரைக்குமே போதுமானது என இந்தோனேசிய கடற்படையின் படை அதிகாரிகளின் பிரதானி யுதோ மார்க்கோனோ நேற்று தெரிவித்துள்ளார்.எனினும் அதற்கு முன்னர் அவர்களை நாம் கண்டுபிடிப்போம் என நம்புகிறோம் எனவும் அவர் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அயல் நாடுகளான சிங்கப்பூர்,மலேசியா ஆகியன தேடுதல்களுக்காக ஏற்கனவே கப்பல்களை அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும்,தேடுதலுக்கு உதவுவதற்காக கப்பலொன்றை அனுப்பியுள்ளதாக இந்தியா நேற்று தெரிவித்தது.அதேவேளை அமெரிக்கா,அவுஸ்திரேலியா,பிரான்ஸ்,ஜேர்மனி உட்பட மேலும் பல நாடுகள் உதவ முன்வந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: