மட்டக்களப்பு பிராந்தியத்தில் 27 கொவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம்


மட்டக்களப்பு பிராந்தியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 27 பேர் கொவிட்-19 தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

இவர்களில் 20 பேர் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவையும்,மூவர் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவையும்,களுவாஞ்சிக்குடி,செங்கலடி,ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலிருந்து தலா ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதுவரை மட்டக்களப்பு பிராந்தியத்தில் 1073 கொவிட் 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.970 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன் 94 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

இதேவேளை மட்டக்களப்பு பிராந்தியத்தில் 9 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மூன்றாவது அலை கொவிட் 19 ஆரம்பித்து 9 நாட்களில் 91 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.எனவே தேவையற்று வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் எனவும்,ஒன்று கூடல்களை தவிர்த்துக் கொள்ளுமாறும்,முகக் கவசங்களை அணிய வேண்டும் என்றும்,கைகளை அடிக்கடி கழுவ வேண்டும் என்றும் அவர் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

No comments: