எமது ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் வெற்றி

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்


பெருந்தோட்ட தொழிலாளர்ளின் ஆயிரம் ரூபாய் அடிப்படை சம்பளம் தொடர்பான அடையாள வேலைநிறுத்த போராட்டம் வெற்றியளித்துள்ளதாகவும் போராட்டத்தில், ஆறுமுகன் தொண்டமான் இருந்த காலப்பகுதியில் உள்ள ஒற்றுமை இன்று முதல் காணப்படுகிறது என்றும்  இலங்கை தொழிலாளர் காங்ரஸின் பொதுச்செயலாளரும் வீடமைப்பு மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

இன்று (05) முழு மலையகத்திலும் முன்னெடுக்கப்பட்ட ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் தொடர்பில் நோர்வூட் பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த இவர்,

இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திற்கு அஸ்கிரிய மல்வத்து ஓயா விகாரையின் பிரதான தேரர் பிசப்ஜானிபெனான்டோ, இந்து மதகுருமார் மற்றும் ஆசியர்கள், தனியார் போக்குவரத்து சாரதிகள், வர்த்தகர்கள் ஆகியோர் இணைந்து ஆதரவினை தந்திருந்தார்கள். அதன் காரணமாகவே எமது ஆயிரம் ரூபாவிற்கான ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம்  வெற்றியளித்துள்ளது.

இந்த ஒரு நாள் போராட்டத்தை,போராட்டம் என்று எண்ணக்கூடாது.இந்த போராட்டத்தின் ஊடாக எமது மக்களின் ஒற்றுமையினை இனங்கான முடிந்தது. 

எமக்கு எமது ஜனாதிபதி அவர்களின் மீது நம்பிக்கையுள்ளது. நிச்சயமாக எமது பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளத்தை பெற்று கொடுப்பார்.

இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட போராட்டமானது அரசாங்கத்திற்கு எதிரான போராட்டமல்ல. பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு எதிரான போராட்டமாகும்.

மக்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள் ஆனால் மலையகத்தில் உள்ள அரசியல்வாதிகள் தான் பிரிந்து செயற்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

எதிர்வரும் திங்கட்கிழமை இடம் பெறவுள்ள பேச்சுவார்த்தையின்  பிறகு நாம் உத்தியோக பூர்வமாக அறிவிப்போம். கூட்டுஒப்பந்தத்தை எவரும் அடிமைசாசனம் என்று கூறமுடியாது.

அநேகமானோர் கூட்டு ஒப்பந்தத்தை விரும்புகின்றனர்.பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு இந்த ஆயிரம் ரூபாயினை பெற்றுகொடுக்க முழு ஒத்துழைப்பினையும் வழங்கியுள்ளனர் என குறிப்பிட்டார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் , முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான கணபதி கனகராஜ், பி.சக்திவேல், நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் ரவி குழுந்தைவேல் என பலரும் கலந்து கொண்டனர்.

No comments: