கல்முனையில் சில பகுதிகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில்;பாண்டிருப்பில் சனநெரிசல்

றாசிக் நபாயிஸ், மருதமுனை நிருபர்


கல்முனை பிரதேசத்தில் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக கடந்த மாதம் 28ஆம் திகதி அறிவிக்கப்பட்டதையடுத்து தொடர்ந்தும் இன்னும் 13நாட்களாகியும் அவை நீண்டு கொண்டே செல்லும் இந்நேரத்தில் கொரோனா தொற்றின் தாக்கமும் பரவலும் கல்முனைப் பகுதிகளில் அதிகரித்தே காணப்படுகின்றன.

இருந்தாலும் தொற்றாளர்களை இனங்காண்பதற்காக கல்முனை மற்றும் ஏனைய பகுதிகளிலும் நாளாந்தம் பி.சி.ஆர்.பரிசோதனைகள் மற்றும் அண்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

கல்முனை செய்லான் வீதியில் இருந்து கல்முனை நகர் வாடி வீதி  வரையில் உள்ள வீதிகள் மற்றும் சகல வர்த்தக நிலையங்கள், அரச தனியார் மற்றும் நிறுவனங்கள், கல்முனை சந்தை, கல்முனை பஸார் மற்றும் பஸ் தரிப்பிடம் உட்பட சகல நிறுவனங்களும் மூடப்பட்ட நிலையில் விற்பனைக்காகவும் பொருள் கொள்வனவுக்காகவும் சனநெரிசலினால் பொங்கி வழிகிறது பாண்டிருப்பு பிரதான சாலையோரங்கள். 

பாண்டிருப்பு சனநெரிசலினால் இன்னும் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கிறனர். இதற்காகவே சுகாதார அதிகாரிகள் பொது மக்களின் நடமாட்டத்தை குறைத்து வீடுகளிலே தங்கி இருக்குமாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறது. அத்தியாவசிய பொருள் தேவை எனின் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் மாத்திரம் செல்வதற்கும் அனுமதி வழக்கப்பட்டும் அவைகளை மீறி பொது இடங்களில் மக்களின் நடமாட்டம் குறைந்தபாடில்லை.

இந்த சனநெரிசலினால் கொரோனா தொற்று இல்லாத பகுதி மக்களுக்கும் இதன் தாக்கமும் பரவலும் தாவும் நிலை உள்ளதை அவதானிக்க முடிகின்றது. 

எனவே உரிய அதிகாரிகள் இவ்விடத்திற்கு வருகை தந்து சுகாதார முறைப்படி விற்பனையில் ஈடுபடவும் கொள்வனவில் ஈடுபடவும் உதவுமாறு மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

No comments: