பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு இனிவரும் காலங்களிலும் அரசாங்கத்தின் தலையீட்டுடன் மேற்கொள்ளப்பட வேண்டும் - எம்.பி. இராதாகிருஷ்ணன் தெரிவிப்பு

க.கிஷாந்தன்


பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வானது இனிவரும் காலப்பகுதியிலும் அரசாங்கத்தின் தலையீட்டுடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நுவரெலியாவில் இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு சமகால அரசியல் மற்றும் பொருளாதார நிலவரம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் இராதாகிருஷ்ணன் எம்.பி., மேலும் கூறியவை வருமாறு,

" பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அறிவித்துள்ளார். அவரின் அறிவிப்பின் பிரகாரம் அடிப்படை நாட்சம்பளமாக 860 ரூபாவும், இதர கொடுப்பனவுகளாக 140 ரூபாவும் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. ஆனாலும் அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு விவகாரத்தில் அரசாங்கத்தின் தலையீடு அவசியம். வாழ்க்கைச் சுட்டெண்ணுக்கமைய அவர்களுக்கான வேதனம் நிர்ணயிக்கப்படவேண்டும். இனிவரும் காலப்பகுதியிலும் தொழிலாளர்களுக்கு நியாயமான வேதன உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் தலையிடவேண்டும்.

கூட்டு ஒப்பந்தத்தில் ஏனைய தொழில்சார் உரிமைகளும் இருக்கின்றன. அவை தொடர்பில் கம்பனிகளுடன் கலந்துரையாடி உரிய சலுகைகளை, உரிமைகளை தொழிற்சங்கங்கள் பெற்றுக்கொடுக்கவேண்டும்.

அதேவேளை, இலங்கையின் பொருளாதாரம் இன்று படுபாதாளத்தில் விழுந்துள்ளது. ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்து. டொலரின் பெறுமதி உச்சம் தொட்டுள்ளது. பொருளாதாரத்தை ஸ்தீரத்தன்மையுடன் வைத்திருக்கும் தகைமையை அரசாங்கம் இழந்துவிட்டது என்பது இதன்மூலம் புலனாகின்றது.

வாழ்க்கைச்சுவை அதிகரிப்பால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொருட்கள், சேவைகளின் விலைகளும் அதிகரித்து வருகின்றன. விலைகளை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக தமிழர்களின் பாரம்பரியத்துடன் தொடர்புபட்ட மஞ்சள் விலையையும் குறைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்." - என்றார்.

No comments: