அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை


கொரோனா வைரஸினைக் கட்டுப்படுத்துவதற்கு ஏனைய நாடுகள் பின்பற்றிய தந்திரோபாய அணுகுமுறையை இலங்கை பின்பற்றாவிட்டால் ஜனவரிக்கு பின்னர் என்ன நடக்கும் என்பது தெரியாது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

கொரோனா வைரஸிற்கு எதிரான தந்திரோபாய அணுகுமுறை அவசியம் என்றும் அது தங்கள் நாட்டிற்கு பொருந்தும் விதத்தில் பயன்படுத்தவேண்டும் எனவும் அந்த சங்கத்தின் வைத்தியர் ஹரித் அலுத்கே தெரிவித்துள்ளார்.

பி.சி.ஆர் பரிசோதனைகளை அதிகரித்து நோயாளிகளை கண்டுபிடிக்கவேண்டும், நகரங்களிற்கு இடையே போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து விசேட கவனம் செலுத்தவேண்டும். இதன் மூலம் மக்கள் மத்தியில் வைரஸ் அபாயத்தினை குறைக்கவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கொவிட் 19 நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது என்றும் மேல் மாகாணத்திலிருந்து வைரஸ் ஏனைய பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நோயாளிகள் புதிதாக அடையாளம் காணப்படுவதால், மருத்துவமனைகளில் இடவசதியில்லாத நிலை உருவாகி வருகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனைகள் தங்களால் இயலக்கூடிய அளவினை கடந்துவிட்டால் நாட்டின் சுகாதார அமைப்பு முறை முற்றாக வீழ்ச்சிகாணலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக தொற்றுநோய் பிரிவும் சுகாதார அமைச்சும் ஜனாதிபதியை எச்சரிக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: