நுவரெலியா மாவட்டத்தில் முதலாவது கொரோனா மரணம் பதிவு

க.கிஷாந்தன்


நுவரெலியாவில் மாவட்டத்தில் முதலாவது கொரோனா மரணம் இன்று (09.01.2021) சனிக்கிழமை அதிகாலை 3.00 மணியளவில் பதிவாகியுள்ளது.

 

இது தொடர்பாக தெரியவருவதாவது

 

கொட்டகலை டிரேட்டன் தோட்டத்தை சேர்ந்த 63 வயதுடைய செல்லையா சிதம்பரம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் டயகம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக கடந்த 01.01.2021 அன்று கொண்டு சென்ற நிலையில் நோயாளியை அங்கு ஏற்றுக் கொள்ள முடியாது என வைத்தியர்கள் தெரிவித்ததை தொடர்ந்து அவரை நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று  அங்கு மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

சுய தனிமைப்படுத்தலில் இருந்த இவருக்கு மூச்சு தினறல் ஏற்பட்டதன் காரணமாகவே இவரை நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். இவர் நிமோனியா காய்ச்சலில் பாதிக்;கப்பட்டிருந்த நிலையிலேயே வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

 

நுவரெலியாவில் அனுமதிக்கப்பட்டிருந்த இவருக்கு கடந்த 01.01.2021 அன்று பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது இவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்ட பின்பு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

 

கடந்த 03.01.2021 அன்று மீண்டும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பொழுதே இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் பின்பு இவர் நுவரெலியா வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (09.01.2021) அதிகாலை 3.00 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

 

உயிரிழந்த நபரின் கொழும்பு உருகொடவத்தை ஆலயம் ஒன்றில் பூசகரின் உதவியாளராக செயற்பட்டு வந்த நிலையிலேயே இவர் தனது வீட்டிற்கு வருகை தந்துள்ள நிலையில் அவரை சுகாதார அதிகாரிகள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளனர்.

 

இதன்பின்பு இவருக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் அவரை உறவினர்கள் டயகம வைத்தியசாலையில் அனுமதிக்க கொண்டு சென்ற பொழுது அவரை அங்கு ஏற்றுக் கொள்ளாமை காரணமாக நுவரெலியா வைத்தியாசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்த நிலையிலேயே இவர் இன்று  உயிரிழந்துள்ளார்.

 

இறந்தவரின் இறுதிக்கிரியைகள் கொரோனா சட்ட விதிகளுக்கு உட்பட்டதாக நுவரெலியா பொது மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

No comments: