சம்மாந்துறை பிரதேச சபைப் பிரிவில் ஏற்படும் சமூகம் மற்றும் சட்ட ரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் ஆலோசனைக் குழு

எம்.எம்.ஜபீர்


சம்மாந்துறை பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசத்தில் நாளாந்தம் ஏற்படும் சமூகம் மற்றும் சட்ட ரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் நோக்குடன் மஜ்லிஸ் அஸ்ஸூறா மற்றும் ஜூம்ஆ பள்ளிவாசல் பிரதிநிகளுடனான சந்திப்பு சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் தலைமையில் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இன்று (16) இடம்பெற்றது.

பொது பாதைகளை அபகரித்தல், பாதையை சுருக்குதல், பொது இடங்கள் மற்றும் நீர்பாசனக் கால்வாய்கள் அபகரித்தல், அனுமதியற்ற சுவர், கட்டிட கட்டுமான வேலைகள், பாதையின் பக்கமாகத் திறக்க கூடியதாக அமைக்கப்பட்டுள்ள கேட், கூரையிலிருந்து நேரடியாக பாதைகளில் நீர் வழியக் கூடியதான குழாய்கள், பொதுப் போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுத்தக் கூடியதாக பாதைகளில் நிறுத்தி வைக்கபடும் வாகனங்கள், மரக்குற்றிகள், வண்டில்கள், கட்டிடப் பொருட்கள், பொது இடங்களில் கொட்டப்படும் திண்மக் கழிவுகள், மழை நேரங்களில் வடிகான்களில் வீசப்படும் கழிவுப்பொருட்கள், வீதி விளக்குகள் பாரமரிப்பு, மையவாடி பாரமரிப்பு, கட்டாக்காலி மாடுகள் மற்றும் விசர் நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்தல், தனியார் கல்வி நிலையங்கள், காணிகளுக்கான உரிமைப்பத்திரம், ஆட்சி உறுதி, விவசாய காணிகளை குடியிருப்பு காணிகளுக்கான செயற்பாடுகள், காணி பிரிப்பு உள்ளிட்ட சமூக மற்றும் சட்ட ரீதியான பிரச்சினைகளுக்கு பொது மக்களுக்கு துரிதமாகவும் விரைவாக தீர்வை பெற்றுக் கொடுப்பதற்காக பிரதேச சபையினால் நேரடியாக கையாலும் போது நாளாந்த ஏற்படும் பிரச்சினைகள் தீர்வு பெற்றுக் கொடுப்பதற்காக விசேடமாக ஆராயப்பட்டது.

சம்மாந்துறை பிரதேச சபையின் உப தவிசாளர் ஏ.அச்சு முஹம்மட், சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட், பிரதேச சபை உறுப்பினர்களான சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஸ்பா, எஸ்.நளீம், மஜ்லிஸ் அஸ்ஸூறா அமீர் மௌலவி கே.எல்.ஆதம்பாவா, மஜ்லிஸ் அஸ்ஸூறா தவிசாளர் எம்.எல்.அப்துல் மஜீட், செயலாளர் எம்.எச்.எம்.அன்வர்,  ஜூம்ஆ பள்ளிவாசல் தலைவர்கள், மஜ்லிஸ் அஸ்ஸூறா முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது சம்மாந்துறை பிரதேசத்திலுள்ள 08 ஜூம்ஆ பள்ளிவாசல் பிரதேசத்தினை எட்டு வலயமாக பிரித்து மஜ்லிஸ் அஸ்ஸூறாவின் தலைமையில் ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டு சம்மாந்துறை பிரதேச சபையினால் நியமிக்கப்படும் குழுவுடன் அந்த அந்த  வலயத்தில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு இவ் ஆலோசனைக் குழுவின் ஆலோசனையுடன் சமூக மற்றும் சட்டப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக இக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.


No comments: