முறையான விதத்தில் ஊக்கமளித்தால் மாத்திரமே பெருந்தோட்டத்துறையில் கால் நடை வளர்ப்பு புத்துயிர் பெரும் - அனுஷா சந்திரசேகரன்


முறையான விதத்தில் ஊக்கமளித்தால் மாத்திரமே பெருந்தோட்டத்துறையில் கால் நடை வளர்ப்பு புத்துயிர் பெரும் என்று சட்டத்தரணியும் அண்ணா சந்திரசேகரன் தொழிலாளர் முன்னணியின் பொதுச்செயலாளரும் சந்திரசேகரன் மக்கள் முன்னணி செயலாளர் நாயகமுமான அனுஷா சந்திரசேகரன் தெரிவித்தார்.

பெருந்தோட்டத்துறையில் கால்நடைவளர்ப்பில் காட்டப்பட்ட ஆர்வம் குறைவடைந்ததற்காக இங்கு வாழும் மக்களை குறைகூறுவதை தவிர்த்து இதற்கான அடிப்படை காரணிகளை கண்டறிய வேண்டும்.

கால்நடை வளர்ப்பிற்கு தடையாக இருக்கும் காரணிகளை கண்டறிந்து தீர்வு காணாதவரை இத் தொழில்துறையை வளர்த்தெடுக்கவே முடியாது.

கால்நடை தீவணங்களின் விலை உயர்வு காரணமாகவே உற்பத்தியாளர்கள் பலர் இதனை கைவிட்டுவிட்டதாக அறிய முடிகிறது. ஆகவே மானிய விலையில் கால்நடை தீவணங்கள் இவர்களுக்கு கிடைப்பதற்கு ஏற்ப இத் தொழில் துறை ஒரு கட்டமைப்பின் கீழ் கொண்டு வர வேண்டும்.

இடைத் தரகர்கள் மூலம் அல்லாமல் நேரடியாக பால் சபை உற்பத்தியாளர்களிடமிருந்து பாலை கொள்வனவு செய்ய வேண்டும்.

குளிர் பிரதேசத்துக்கு ஏற்ற புதிய கால்நடை இனங்களை அறிமுகம் செய்து அதற்கேற்ற தீவண முறைகளையும் அறிமுகம் செய்ய வேண்டும்.

ஊட்டச்சத்துள்ள புல் வகைகளை உற்பத்தி செய்யும் வசதியை ஊக்குவிக்க வேண்டும்.

கால் நடைகள் கட்டாயமாக காப்புறுதி செய்யப்பட வேண்டும். அல்லது பசு மாடுகளின் ஏதாவது இழப்புகளிலிருந்து இவர்களால் மீளவே முடியாது போய்விடும்.

இவை அனைத்தையும் விட முக்கியமாக கால் நடை மருத்துவர்களின் சேவை இவர்களுக்கு தேவையான போதும் உரிய முறையிலும் கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும்.

கால்நடைகளின் பிரசவ கால சிக்கல்களின் போது கால் நடை மருத்துவர் ஒருவரை தொடர்பு கொள்வதில் இவர்கள் பல்வேறு சிரமங்களை முகம் கொடுக்கிறார்கள்.

முழு நேரமாக இயங்கும் வைத்தியசாலைகளுக்கே ஒரு பிரசவ தாயை நேரத்தோடு அனுமதிப்பதில் பல்வேறு சிக்கல்களை மக்கள் முகம் கொடுக்கும் நிலையில் பகல் நேரத்தில் மட்டுமே இயங்கும் கால்நடை வைத்தியசாலைகளின் சேவை இம் மக்களுக்கு உரிய நேரத்தில் கிடைப்பதே இல்லை என அறிய முடிகிறது.

இத்துறையில் ஈடுபடுபவர்களுக்கு நவீன முறையிலான  பயிற்சிகள் வழங்கப்பட்டு இத் தொழில் துறை கவர்ச்சியாக்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு தோட்டங்களிலும் உள்ள உற்பத்தியாளர்களுடன் பால் சபை கால்நடை வைத்தியர் கால்நடை அபிவிருத்தி அமைச்சு என்பன நேரடியான தொடர்பினை ஏற்படுத்த வேண்டும்  எனவும் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

No comments: