தமிழ் தேசிய கூட்டமைப்பினது தேசிய பட்டியல் தொடர்பில் கிழக்கு தேசம் அரசியல் செயற்பாட்டாளர் வஃபா பாறூக்கின் கோரிக்கை
எஸ்.அஷ்ரப்கான்
தமிழ் தேசிய கூட்டமைப்பு அதற்கு கிடைத்து இருக்கின்ற தேசிய பட்டியல் ஆசனத்தை ஏதேனும் வாய்ப்பு இருந்தால் புரிந்துணர்வு அடிப்படையில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த முஸ்லிம் புத்திஜீவி ஒருவருக்கு தற்காலிகமாக கொடுத்து உதவ வேண்டும் என்று கிழக்கு தேச விடுதலை இயக்கத்தின் தலைவரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக பொருளாளருமான வஃபா பாறூக் கோரிக்கே விடுத்தார்.
இது தொடர்பாக இன்று (25) வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்கு தெரிவித்தவை வருமாறு,
முஸ்லிம்களின் தனித்துவ அரசியல் அர்த்தம் இழந்து கொண்டே செல்கின்ற கால கட்டம் ஒன்றில் நாம் இருக்கின்றோம். ஒரு பக்கத்தில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தால் நசுக்கப்பட்டு கொண்டு இருக்கின்றனர். இன்னொரு பக்கத்தில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொள்கைகளை இழந்தவர்களாக நல்ல பிள்ளைகளை போல முக்கியமான தருணங்களில் அரசாங்கத்துக்கு நடந்து கொண்டு இருக்கின்றனர்.
இந்நிலையில் இந்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த முஸ்லிம்கள் மீதும் திட்டமிட்ட வகையில் கட்டவிழ்த்து விடப்பட்டு இருக்கின்ற ஜனாஸாக்கள் எரிப்புக்கு எதிராக தமிழ் தரப்புகள் பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் குரல் கொடுத்து வருவது முஸ்லிம் மக்களுக்கு புதிய நம்பிக்கை ஒளியை ஏற்படுத்தி ஆறுதலை தந்திருக்கின்றது.
சிங்கள தரப்பினரை விடுத்து தமிழ் தரப்பினருடன் இணைந்து அரசியலை முன்னெடுத்து செல்வதுதான் முஸ்லிம்களுக்கு இருக்க கூடிய பொருத்தமான விருப்ப தெரிவு ஆகும். ஏனெனில் நாம் தாய்மொழியால் ஒன்றாக இணைந்து இருப்பவர்கள். எமது உரிமைகளை சிங்களத்திடம் இருந்து மீட்டெடுக்க வேண்டியவர்களாக உள்ளோம்.
தமிழ் தேசியமும், முஸ்லிம் தேசியமும் ஒன்றாக இணைந்தும், இணங்கியும் பரந்து பட்ட அளவில் செயற்பட வேண்டியது காலத்தின் அவசியம் ஆகும். அதே போல வருகின்ற தேர்தல்களில் தமிழ் தரப்பினர்களின் கட்சிகளில் முஸ்லிம் பெரும்பான்மை பிரதேசங்களில் முஸ்லிம் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவதுகூட மிக பொருத்தமான வரவேற்புக்கு உரிய விடயமாக இருக்கும்.
தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கிடைத்த தேசிய பட்டியல் ஆசனம் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களை கருத்தில் கொண்டு சகோதரர் கலையரசனுக்கு வழங்கப்பட்டு இருக்கின்றது. பெரும்பான்மை கட்சிகளிலும், முஸ்லிம் கட்சிகளிலும் உள்ள முஸ்லிம் எம்.பிகளின் குரல்கள் அடக்கப்பட்டும், அடங்கியும் உள்ள தற்போதைய இக்கட்டான சூழலில் ஏதேனும் வாய்ப்புகள் இருக்குமானால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசிய பட்டியலை தற்காலிகமாக சிறிது காலத்துக்கு அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த முஸ்லிம் புத்திஜீவி ஒருவருக்கு தந்துதவுமாறு கேட்டு கொள்கின்றோம்.
No comments: