கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்த மருதமுனையில் மாபெரும் விழிப்புணர்வு பேரணி
ஏ.எல்.எம்.ஷினாஸ்
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்திற்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.
குறிப்பாக கல்முனை நகரில் குறிப்பிட்ட சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக பிரகடனப்படுத்தி தொற்று நோயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மருதமுனை ஜம்மியத்துல் உலமா சபை மற்றும் அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனம் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த கொரோனா தொற்று நோயிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான மாபெரும் விழிப்புணர்வு பேரணி இன்று (18) மாலை மருதமுனையில் நடைபெற்றது.
மஸ்ஜிதுல் நூர் ஜூம்ஆ பள்ளிவாசல் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட இந்த விழிப்புணர்வு பேரணி மருதமுனை பிரதான வீதி உட்பட பிரதேசத்தின் சகல வீதி வழியாகவும் இந்த மாபெரும் விழிப்புணர்வு பேரணி இடம்பெற்றது.
பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமானதாகும், பொது இடங்களில் ஒன்று கூடுவது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது, சமூக இடைவெளி பின்பற்றுவதன் அவசியம் காணப்படவேண்டும், அத்தியாவசிய தேவைகள் இல்லாமல் வீணாக பொது பயணங்களில் ஈடுபடுவது மற்றும் வீதிகளிலும் பொது இடங்களிலும் ஒன்றாக கூடி நிற்பது போன்ற விடயங்களை முற்றாக தவிர்க்க வேண்டும் போன்ற விடயங்ள் ஒலிபெருக்கி ஊடாக வலியுறுத்தப்பட்டன.
இவ்வாறான சுகாதார சட்ட விதிமுறைகளை மீறி நடப்பவர்கள் மீது மருதமுனை ஜம்மியத்துல் உலமா சபை மற்றும் பள்ளிவாசல் ரீதியாக பொலிசாரின் உதவியோடு சட்ட நடவடிக்கை கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டது.
இந்த விழிப்புணர்வு பேரணியில் கல்முனை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். குணசிங்கம் சுகுணன், கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி எம்.ஐ ரிஸ்னி, அனைத்து பள்ளிவாசல் சமூகத்தின் தலைவர் அஷ் செய்க் எம்.ஐ.குசைனுத்தீன் (றியாழி), ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் டாக்டர்.எஸ்.எம்.எம்.எஸ். மௌலானா, சிரேஷ்ட விரிவுரையாளர் எப்.எம்.அன்சார் மெளலானா, பள்ளிவாசல் முன்னாள் தலைவர் எம்.எல்.எம். ஜமால்தீன் உட்பட முக்கியஸ்தர்கள் , கல்விமான்கள், புத்திஜீவிகள், உலமாக்கள் என பலரும் இதில் கலந்து கொண்டனர்.
No comments: