கல்முனையில் கொவிட் தடுப்பு செயற்பாடுகளை சீர்குலைக்க தீய சக்திகள் முயற்சி - மேயர் றகீப் குற்றச்சாட்டு
றாசிக் நபாயிஸ்
கல்முனையில் முன்னெடுக்கப்படுகின்ற கொவிட்-19 தடுப்பு செயற்பாடுகளை சீர்குலைப்பதற்கு சில தீய சக்திகள் முயற்சிப்பதாக கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது;
கடந்த புதன்கிழமையன்று (16-12-2020) கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடற்கரைப்பள்ளி வீதியை மையப்படுத்தி 90 பேருக்கு எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட ரெபிட் அன்டிஜன் பரிசோதனையில் 14 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் சுகாதாரத்துறையினரும் என்னிடம் விடுத்த வேண்டுகோளின் பேரில் அன்றைய தினம் இரவு மாநகர சபையில் எனது தலைமையில் அவசர ஒருங்கிணைப்புக் கூட்டமொன்று கூட்டப்பட்டது.
அதில் பிராந்திய மற்றும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகள், மாநகர ஆணையாளர், பிரதேச செயலாளர், பொலிஸ் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள், மாநகர சபையின் சில உறுப்பினர்கள், வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது கொவிட் தடுப்பு நடவடிக்கைகளுக்கு கல்முனைப் பிரதேசத்தில் மக்களின் ஒத்துழைப்பின்மையால் ஏற்படக்கூடிய பாரதூர நிலைமை குறித்து கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரியினால் சுட்டிக்காட்டப்பட்டது.
இதையடுத்து சுகாதாரத்துறையினரின் அறிவுறுத்தல்களின் பேரில் வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகள், சிவில் செயற்பாட்டாளர்கள் அனைவரதும் ஆலோசனைகள் மற்றும் இணக்கப்பாட்டுக்கமைவாக கல்முனை செய்லான் வீதி தொடக்கம் மாதவன் வீதி வரையான பிரதேசங்களை வியாழக்கிழமை (17-12-2020) தனிமைப்படுத்தல் பிரதேசமாக அறிவிப்பதென தீர்மானிக்கப்பட்டது.
அன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையின்போது 32 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்ததாக கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அறிவித்ததைத் தொடர்ந்து அன்றைய தினம் மேற்படி அனைத்து தரப்பினரும் பங்குபற்றிய இரண்டாவது ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், பாரதூரமான நிலைமையை கவனத்தில் கொண்டு, சுகாதார வைத்திய அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் கல்முனைக்குடி பிரதேசம் முழுவதும் உள்ளடங்கலாக கல்முனை ஸாஹிரா வீதி தொடக்கம் வாடி வீட்டு வீதி வரையான பிரதேசங்களை வெள்ளிக்கிழமை (18) தனிமைப்படுத்துவதென ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.
அதேவேளை, அக்காலப்பகுதியில் மருதமுனை, சாய்ந்தமருது மற்றும் தமிழ் பிரதேசங்களில் கணிசமானளவு தொற்று ஏற்படவில்லை எனவும் ஏற்கனவே தொற்று ஏற்பட்டவர்கள் ஒருசில குடும்பங்களையே சேர்ந்தவர்கள் எனவும் அது சமூக பரவலாக மாறவில்லை எனவும் நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் பரிசோதனைகளுக்கு பொது மக்கள் ஒத்துழைப்பதாகவும் அவ்வப்பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகள் இக்கூட்டங்களில் அறிக்கை சமர்ப்பித்திருந்தனர்.
இதன் அடிப்படையிலேயே இப்பிரதேசங்கள் தவிர்க்கப்பட்டு, மேற்படி கல்முனைப் பிரதேசத்தை மாத்திரம் தனிமைப்படுத்தும் தீர்மானம் அக்கூட்டத்தில் எடுக்கப்பட்டிருந்தது.
கொவிட் கட்டுப்பாடு நடவடிக்கைகளை சீராக முன்னெடுப்பதற்காக அனைத்துத் துறையினரையும் ஒருங்கிணைப்பு செய்வது மாத்திரமே எனது பணியாகும். தீர்மானம் மேற்கொள்வது சுகாதாரத்துறையினரின் பொறுப்பாகும். இதில் அரசியல் நோக்கம் எதுவுமில்லை என்பது எல்லோருக்குமே தெரியும்.
இதில் மக்கள் நலன் சார்ந்த விடயங்கள் மாத்திரமே கவனத்தில் கொள்ளப்பட்டதே தவிர, இன, மத, பிரதேச ரீதியாக சிந்தித்து வேறெந்த உள்நோக்கத்தின் அடிப்படையிலும் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என்பது கூட்டத்தில் பங்குபற்றிய கல்முனை வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகள் உறுதிப்படுத்துவார்கள் என நம்புகின்றேன்.
நிலைமை இவ்வாறிருக்க மாநகர முதல்வராகிய நான் மாத்திரம் வேண்டுமென்றே தன்னிச்சையாக இத்தீர்மானத்தை மேற்கொண்டிருப்பதாகத் தெரிவித்து, சிலர் முகநூல்களில் எனக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் நச்சுக்கருத்துக்களை பரப்பி வருகின்ற அதேவேளை கொவிட் தடுப்பு செயற்பாடுகளுக்கும் இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.
எனது ஊர் மருதமுனை என்பதற்காக கல்முனையின் பொருளாதாரத்தை நாசமாக்குவதற்கு நான் முனைவதாக அவர்கள் நச்சுக்கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இதனை வைத்து பிரதேசவாதங்களை தூண்டுவதற்கும் இனங்களிடையே குழப்பங்களை ஏற்படுத்துவதற்கும் அவர்கள் வரிந்து கட்டிக்கொண்டு செயற்படுவதை அவதானிக்க முடிகிறது.
அவர்களது எண்ணங்களுக்கு பலியாக வேண்டிய தேவை எனக்கில்லை. ஆகையினால் இனிவரும் காலங்களில் கல்முனை மாநகர பிரதேசங்களில் கொவிட் கட்டுப்பாடு செயற்பாடுகள் தொடர்பில் முதல்வர் என்ற ரீதியில் எனது வகிபாகத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டியேற்படும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.
இதனால் இப்பிரதேசத்தில் ஏதும் பாதக விளைவுகள் ஏற்படுமாயின் கொவிட் தடுப்பு செயற்பாடுகளை சீர்குலைக்க முனைவோரே பொறுப்புக்கூற வேண்டும் என்பதுடன் அவர்களது விடயத்தில் மக்கள் விழிப்படைய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்" என்று மேயர் றகீப் வலியுறுத்தியுள்ளார்.
No comments: