இந்த அரசாங்கத்துக்கு ஆதரவாக இருந்த நான் தற்போது அதற்காக வெட்கப்படுகின்றேன்-கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் பெஸ்டர் ஏ.எம்.றியாஸ்
எஸ்.அஷ்ரப்கான்
இந்த அரசாங்கத்துக்கு ஆதரவாக இருந்த நான் தற்போது அதற்காக வெட்கப்படுகின்றேன். அரசாங்கத்தின் மீது இத்தனை காலமாக தனிப்பட்ட முறையில் நான் வைத்திருந்த நம்பிக்கையை முற்றாக இழந்து விட்டேன் என்று கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் பெஸ்டர் ஏ.எம்.றியாஸ் வேதனையுடன் தெரிவித்தார்.
கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான பெஸ்டர் ஏ.எம்.றியாஸின் ஏற்பாட்டில், கல்முனை அமானா வங்கி சதுக்கத்தில் இன்று (20) இடம் பெற்ற இந்த அமைதி ஆர்ப்பாட்டத்தில், அரசியல் செயற்பாட்டாளர் வபா பாறூக் மற்றும் கல்முனை பிரதேச வர்த்தகர்கள் இளைஞர்கள், புத்திஜீவிகளும் கலந்து கொண்டனர்.
இங்கு கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் பெஸ்டர் ஏ.எம். றியாஸ் தொடர்ந்தும் கருத்து வெளியிடும்போது,
இன்று இந்த நாட்டிலே கொரோனா வைரஸினால் ஏற்படும் மரணத்தினால் எமது முஸ்லிம் ஜனாஸாக்களையும் பலாத்காரமாக எரிக்கின்ற நிலையை ஏற்றுக்கொள்ள முடியாது. இனிமேலாவது இந்த அரசாங்கம் முஸ்லிம்களின் மீது இழைக்கின்ற பிழையான நடைமுறைகளை நிறுத்தி ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.
பல நாடுகளில் இறந்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்படுகின்ற போது எமது நாட்டில் மாத்திரம் எரிப்பதானது ஆட்சியாளர்களின் மன வைராக்கியத்தை வெளிப்படுத்தும் இனவாத செயற்பாடாகும்.
அரசியல் வேறுபாடுகளை மறந்து எமது சமூகத்தின் கடைசிக் கடமைக்காக அனைவரும் ஒன்று பட்டு ஒருமித்த குரலில் இந்த நாட்டின் அரசாங்கத்துக்கும் சர்வதேசத்துக்கும் அழுத்தம் தெரிவிக்க ஒன்றுபட வேண்டும்.
எமது கல்முனைப் பிரதேசத்திலுள்ள முஸ்லிம் சகோதரர்கள் பெண்கள் எல்லோரும் இந்த அநியாய எரிப்புக்கு எதிராக இந்த போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும். அதற்கு எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்

No comments: