பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள விடயத்தில் அரசாங்கமும், கம்பனிகளும் நாடகமாடுகின்றன - கணேசலிங்கம் தெரிவிப்பு

க.கிஷாந்தன்


பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள விடயத்தில் அரசாங்கமும், கம்பனிகளும் நாடகமாடுகின்றன. சம்பள விடயத்தில் இழுத்தடிப்புகள் தொடர்கின்றன. இம்முறையும் அவ்வாறானதொரு நிலைமைக்கு இடமளிக்கமுடியாது என்று '1000' ரூபாவுக்கான இயக்கத்தின் மலையக பிரதம இணைப்பாளர் கணேசலிங்கம் தெரிவித்தார்.

 

அட்டனில் இன்று (20.12.2020) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு,

 

" ஆயிரம்  ரூபா வேண்டும் என்ற கோரிக்கை 2015 ஆம் ஆண்டு முதல் விடுக்கப்பட்டுவருகின்றது. தொழிலாளர்களின் இந்த கோரிக்கைக்கு ஆதரவாக தொழிற்சங்கங்களும் போராடின. குறிப்பாக கடந்தமுறை கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும்போது எமது இயக்கம் பாரிய அழுத்தங்களை கொடுத்திருந்தது. கொழும்பிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் சில தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் போராட்டத்தைக்காட்டிக்கொடுத்துவிட்டு கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடன.

 

தற்போதைய சூழ்நிலையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் போதாது. பொருளாதார நிலைமைக்கேற்ப நாளொன்றுக்கு 2000 ரூபாவுக்கும் மேல் வழங்கப்படவேண்டும். 

 

ஆனால் 2021 ஆம் ஆண்டு வரபோகின்றது. அந்த ஆண்டிலும் ஆயிரம் ரூபா பற்றியே பேச வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா வழங்கப்படும் என்ற ஜனாதிபதியின் உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் வரவு - செலவுத் திட்டத்தில் ஆயிரம் ரூபா குறித்த முன்மொழியை பிரதமர் முன்வைத்துள்ளார். இதற்கு கம்பனிகள் இன்னும் சம்மதம் தெரிவிக்கவில்லை. ஆக சம்பள விடயத்தில் அரசாங்கமும், கம்பனிகளும் நாடகமாடுகின்றன.

 

இதற்கு எதிராக வீதியில் இறங்கி போராடுவதற்கு மக்கள் தயார். ஆனால் கொரோனா நிலைமையால் மௌனம் காக்கின்றோம். இம்முறை தொழிலாளர்களை ஏமாற்றுவதற்கு முயற்சிக்ககூடாது. அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவேண்டும். அதற்கான எமது அழுத்தம் தொடரும்." - என்றார்.


No comments: