ஆறாதவடுக்களையும் மாறாத துயரங்களையும் ஏற்படுத்திச் சென்ற ஆழிப்பேரலைக்கு16 ஆண்டுகள்!

செ.துஜியந்தன்


ஆழிப்பேரலை ஊருக்குள் புகுந்து ஊழித் தாண்டவம் ஆடி ஆண்டுகள் 
பதினாறு   கடந்து விடடன. ஆனாலும் அவை ஏற்படுத்திச் சென்ற வலிகளும், வடுக்களும் இன்றும் மக்கள் மனங்களைவிட்டு அகலவில்லை.

ஆழிப்பேரலையின் கோரத் தாண்டவத்தினால் கிழக்கில் மட்டும்  6733 பேர் கடலுக்கு இரையாகிப்போன துயரச்சம்பவம் நடந்தேறியிருந்தது. 

2004 டிசம்பர் 26 ஞாயிற்றுக்கிழமை தேசமே ஒரு கணம் ஸ்தம்பித்துப் போனது. எங்கு பார்த்தாலும் ஒப்பாரிச் சத்தங்கள், கூக்குரல்கள், பிணக்குவியல்கள், மக்கள்மனங்களில் அதிர்ச்சி, ஏக்கம், அச்சம், அடுத்து என்ன நடக்குமோ? என்ற மிரட்சி கரையோரப்பிரதேசத்து மக்களின் வாழ்க்கையே இருண்டு போனது யாருக்கு யார் ஆறுதல் கூறுவது என்று தெரியவில்லை. எல்லோருமே பாதிக்கப்பட்டிருந்தனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக விரைந்து வந்த மனிதாபிமானவர்களின் சேவைகள் அன்று பாராட்டத்தக்கதாக இருந்தன. இதேவேளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது போல் பாசாங்கு செய்து அந்த அவலத்திலும் மக்களின் சொத்துக்களை திருடி குளிர்காய்ந்த கயவர்களையும் நம்மால் மறக்கமுடியாது.

அன்று ஆழிப்பேரலை அடித்தபோது தேசமே அழிவதாகத்தான் பலர் நினைத்தார்கள். இதனால் கருத்து வேறுபட்டு நின்ற உறவுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து கட்டியழுதார்கள். நிலையில்லா இவ் வாழ்க்கையைப்பற்றி சந்திக்கு சந்தி நின்று புராணம் படித்தவர்கள் என்ன பயன்? நான்காம் நாள் வந்த நிவாரணத்தைப் பகிர்ந்து கொள்வதில் தமக்குள் அடிபட்டுப் பிரிந்து நின்றார்கள். இது வெட்கித் தலைகுனிய வேண்டிய விடயமாக இருந்தது. 

இன்று சுனாமிக்கு முன்னர் மக்கள் வாழ்ந்த அன்பு, கருணை, ஈகைக்குணம் போன்ற வாழ்க்கை முறையை எவரிடத்திலும் காணமுடியவில்லை. எல்லோரிடத்திலும் பொது நலத்தைவிட சுயநலமே கூடிவிட்டது. தானும் தன் குடும்பமும் வாழ்ந்தால் போதும். மற்றவர் எக்கேடு கெட்டுப்போனால் எனக்கென்ன? என்ற நிலையே காணப்படுகின்றது. அந்தளவிற்கு மனிதமனங்கள் மாறிவிட்டன. இதனைப்பார்த்தால் மீண்டும் ஒரு சுனாமி வரக்கூடாத என நினைக்கத்தோன்றுகின்றது.

இறைவன் இப் பூமிக்கு நேரடியாக வருவதில்லை. மனிதர்கள் தவறுசெய்கின்றபோது. அவ்வப்போது இவ்வாறான இயற்கை வடிவங்களில் மக்களுக்கு பாடம் கற்பிப்பதற்க்கு அழிவுகளைக் காட்டிவருகின்றார். ஆனால் மனிதர்கள் மனிதர்களாக இல்லாமல் மிருகங்களைவிட கேவலமாகவல்லவா நடந்து கொள்கின்றார்கள். 

தர்மத்தைக் காக்கவும் அதர்மத்தை அழிக்கவும் அவ்வப்போதுதான் அவதரிப்பதாக பகவத்கீதையில் கிருஸ்ணனர் கூறுகின்றார். இன்று இப் பூமில் நடக்கும் அநீதிகளைப் பாரக்கின்றபோது. மீண்டும் கடவுள் சாபத்திற்கு ஆளாக நேரிடுமோ என்ற அச்சமாகவுள்ளது.

அன்று சுனாமிப் பாதிப்பிற்குள்ளான மக்களைவிட சுனாமித்தண்ணீர் காலில் படாதவர்கள்தான் அதைக் காரணம்காட்டி பல்வேறு வசதிவாய்ப்புக்களைப் பெற்றுக்கொண்டார்கள். என்பது வெள்ளிடைமலையாகும்.

சுனாமி ஏற்ப்பட்டு   பதினாறு   வருடங்கள் கடந்து விட்டபோதிலும் இன்னும் அந்தப்பாதிப்பிலிருந்து மீளமுடியாதவர்களாகவே நேரிடையாகப் பாதிக்கப்பட்ட மக்கள் இருக்கின்றனர். கடந்த பதினாறு வருடங்களாக சிலர் இருப்பதற்க்கு கூட வீடு இல்லாது இன்னும் உறவினர் வீடுகளிலும், இரவல் வீடுகளிலும் ஒட்டிக்குடித்தனம் நடத்திவருகின்றனர். 

இந்நிலை அம்பாறையின் பல்வேறு இடங்களில் காணப்படுகின்றது. குறிப்பாக சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென அம்பாறை நுரைச்சோலை எனும் இடத்தில் சவுதியரசாங்கத்தின் நிதியுதவியுடன் கட்டப்பட்டுள்ள வீட்டுத்திட்டம் இன்னும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கையளிக்கப்படாதுள்ளது. இன்று இவ் வீட்டுத்திட்டம். பாழடைந்த நிலையில் காட்சியளிக்கின்றது. அக்கரைப்பற்று பிரதேசத்திலுள்ள மக்கள்   கட்டப்பட்ட அவ் வீடுகளை தமக்கு வழங்குமாறு அடிக்கடி ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டுவந்தனர்.  அவர்களுக்கு இன்றுவரை தீர்வு பெற்றுக்கொடுக்கப்படாதுள்ளது.

2004 டிசம்பர் 26ல் உலகை உலுக்கிய சுனாமி அனர்த்தத்தினால் 12 நாடுகளின் கரையோரப் பகுதிகள் முற்றாக அழிவுகளைச் சந்தித்திருந்தன. இதனால் 174,000 உயிர்களை இச் சுனாமிப் பேரலை பறித்திருந்தது. சர்வதேச தரவுகளின்படி சுனாமியால் அதிக இழப்புக்களை சந்தித்த நாடுகளில் இந்தோனேசியாவே உள்ளது. இந்தோனேசியாவில் 126,473 பேரையும், இந்தியாவில் 10,749 பேரையும், தாய்லாந்தில் 5,595 பேரையும் சுனாமிப்பேரலை காவு கொண்டிருந்தன.

இலங்கையில் வடக்கு கிழக்கு, தென்மேல், வடமேல் மாகாணங்களின் கரையோரப்பிரதேசங்கள் சுனாமியினால் மிகமோசமான தாக்கத்திற்குள்ளாகியிருந்தன. 

இதனால் 36,594 பேர் உயிரிழந்தும்,காணாமல் போயிருந்தனர். இதற்கிணங்க காலிமாவட்டத்தில் 1785பேரும், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 1102 பேரும், மாத்தறை மாவட்டத்தில் 1153 பேரும், யாழ் மாவட்டத்தில் 901 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 06 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 2652பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 1756 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் 761 பேரும், அம்பாறை மாவட்டத்தில் 4216 பேரும் உயிரிழந்தும், காணாமல்போயுமிருந்தனர். சுனாமியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அதிக உயிரிழப்புகளை சந்தித்த மாவட்டமாக அம்பாறை மாவட்டமே காணப்படுகின்றது.


கல்முனை பிரதேசத்தில் நினைவஞசலி நிகழ்வுகள் - 2020 

டிசம்பர்26 நாட்டையே உலுக்கிய சுனாமிபேரலையில் சிக்கி உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து டிசம்பர்-26 நாட்டின் கரையோரப் பிரதேசத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் இடம்பெற்றுவருகின்றன.. கல்முனைப் பிரதேசத்தில் கல்முனை, பாண்டிருப்பு, மணல்சேனை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவுத்தூபிக்குமுன் டிசம்பர் 26ல் மக்கள் ஒன்று கூடி தற்போதைய கொரோனா தொற்றைக் கருத்தில் கொண்டு  சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றிஅஞ்சலிசெலுத்தவுள்ளனர்.

குறிப்பாக  கல்முனை சவக்காலை வீதியில் கடற்கரை பிரதேசத்தையண்டிய பகுதியில் அமைந்துள்ள சுனாமி நினைவுத் தூபிக்கு முன்பாக பொதுமக்கள் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தவுள்ளனர். 26 ஆம் திகதி காலை 8.55 மணிக்கு இவ் அஞ்சலி நிகழ்வு இடம்பெறும்

இதேவேளை பாண்டிருப்பு கடற்கரையில் மலர் தூவி பொதுமக்கள் அஞ்சலிசெலுத்தவுள்ளதுடன். பாண்டிருப்பு சவக்காலை வீதியிலுள்ள சுனாமி நினைவுத் தூபிக்கு முன்பும் மக்கள் சுடர் ஏற்றி அஞ்சலிக்கவுள்ளனர் . இங்குள்ள இந்து,ஆலயங்களிலும், கிறிஸ்தவ தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், பௌத்தவிகாரை ஆகியவற்றில் விசேட ஆத்மசாந்திப் பிரார்த்தனைகள் நடைபெறவுள்ன.

கடந்த 
பதினாறு   வருடங்களாக உறவுகளை இழந்து, உடமைகளை இழந்து இன்று தொடர்மாடிக் குடியிருப்புக்களில்சொல்லொண்னாத் துயரங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் கரையோரப் பிரதேசத்து மக்களின் வாழ்வில் அடுத்த வருடமாவது 2021ல் இருளகன்று ஒளி பிறக்குமா?

No comments: