தமது ஆட்சியை பாதுகாத்து கொள்வதற்கான படிமுறையே 19வது திருத்தம் நீக்கமாகும்.

செல்வி                                                                                                                                                                     

கூட்டமைப்பு என்பது பலருடைய அர்பணிப்பில் உருவாக்கப்பட்டது.மாமனிதர்கள் பலர் தமது உயிரை அர்பணித்திருக்கிறார்கள்.கூட்டமைப்பு பல இடங்களில் தவறுகளை விட்டுள்ளது.நடிப்பவர்களுக்கே பதவி வழங்கப்படுகிறது.மக்களுக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்ற வருபவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவதில்லை.அவர்களை தட்டிக்கொடுப்பதுமில்லை.பல திறமையான ஆளுமைமிக்க இளைஞர்கள் இன்று சிதறுப்பட்டு திசை தெரியாமல் நின்கின்றார்கள்எமக்கு கிடைத்த மிகப்பெரிய சாபக்கேடு தமிழ்கட்சிகளின் பிளவாகும்.

இவ்வாறு அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் அகத்தியன் செய்தி தளத்திற்கு வழங்கிய   விசேட நேர்காணலில் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கேள்வி_ 19வது,திருத்தம் தொடர்பில் பல சாதகபாதகமான  கருத்துக்கள் முன்வைக்கப்படுகிறது.19 திருத்தம் நீக்கம் தொடர்பில் எவ்வகையான பாதிப்புகளை ஏற்படுத்துமென நீங்கள் கருதுகிறீர்கள் ?

வணக்கம்.எல்லாப்புகழும் இறைவனுக்கே! 19வது திருத்தம் நீக்கம் தொடர்பாக இந்த அரசாங்கம் கடந்த காலத்திலிருந்தே முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட  ஒரு பேசும் விடயமாக இருந்து வருகின்றது.அதுமட்டுமல்லாமது 13வது திருத்தத்திலும் மாற்றங்களை கொண்டுவரவேண்டிய தேவைப்பாடும் அரசாங்கத்துக்கு எழுந்துள்ளது.13வது திருத்தம் தொடர்பில் சிங்கள மக்களை திருப்திப்படுத்தக்கூடிய அல்லது அவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் மாற்றுவதே அரசாங்கத்தின் எண்ணப்பாடாக உள்ளது.ஆனால் 19 வது திருத்தில் பெருமளவு நன்மையான விடயங்களும் நீக்கப்படப் போகிறது.குறிப்பாக மக்களின் ஜனநாயக உரிமைகளின் ஒன்றான தகவலறியும் சட்டமுலம். மற்றது நீதி நிலைநாட்டக்கூடிய வாய்ப்புகள் முற்றுமுழுதாக இல்லாமல் செய்யப்பட்டு முழுக்கமுழுக்க தங்களுக்கு சார்பாக எதிர்காலத்தில் தங்களது ஆட்சிக்கு எதுவிதமான பாதகங்களும் ஏற்படாத வகையில் ஒரு திருத்த சட்டத்தை கொண்டுவரும் வகையில் வேலைத்திட்டங்களை அரசாங்கத்தினால் முன்னெடுத்து வருகின்றது.இதேவேளை 2015 ல் முன்னாள் ஜனாதிபதியாகவிருந்த மைத்திரிபால சிறசேனவினால் கொண்டுவரப்பட்ட 19வது சீர்திருத்ததத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட தேர்தல் ஆணைக்குழு ,பொதுச்சேவை ஆணைக்குழு,தேசிய காவல்துறை ஆணைகுழு,கணக்காய்வுச்சேவை ஆணைக்குழு,மனிதஉரிமைகள் ஆணைக்குழு,எல்லைநிர்ணய ஆணைக்குழுலஞ்சம் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு,நீதி ஆணைக்குழு,அரசகருமமொழிகள் ஆணைக்குழு.இவையனைத்தும் 19வது திருத்தம் நீக்கம் காரணமாக வெகுவாக  பாதிப்படையப்போகின்றது.

கேள்வி_கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 16 ஆசனங்களை பெற்ற கூட்டமைப்பு இம்முறை 09 ஆசனங்களை பெற்றுள்ளது.இவ்வீழ்ச்சிக்கு ஏதுவான காரணிகள் என்ன?

 16 ஆசனங்கள் என்று பார்ப்பதைவிட 22 ஆசனங்கிளில் இருந்து நாம் 09 ஆசனங்களை பெற்றுள்ளோம்.என்பதே பொருத்தம் என நினைக்கின்றேன்.இவ்வாறன நிலைமைக்கு தள்ளப்படடுள்ளோம் என்பதை நினைக்கும் போது மிகவும் மனவேதனையாக  உள்ளது. ஆனால் இவ்வாறான கழுதை தேய்து கட்டெறும்பு ஆன கதைக்கு கூட்டமைப்பில் உள்ள மெத்தப்படித்தவர்களின் அசட்டையீனத்தால் ஏற்பட்ட விளைவே இவ்வீழ்ச்சிக்கு காரணமாகும் குறிப்பாக மக்களின் சாதாரண பிரச்சனைகள் இங்கு தீர்க்கப்படவில்லை,கட்சியின் அடிமட்ட தொண்டர்களின் கருத்துக்கள் உள்வாங்கப்படவில்லை.தமிழ் தேசியத்தின் பால் பற்றுறுதி கெண்டவர்கள் கூட்டமைப்புக்குள் உள்வாங்கப்படவில்லை.மற்றது படித்த இளைஞர்கள் உள்ளவாங்கப்படவில்லை.இவ்வாறு மக்களின் நலன் சாராது தங்களின்குறுகிய சுயநல போக்கிற்காக அரசியல் செய்ய முனைந்ததன் விளைவே இந்த வீழ்ச்சிக்கு காரணம் என நான் கருதுகின்றேன்.

கேள்வி_ ஏறத்தாள 26 வருடங்களுக்கு முன்னர் அம்பாறையில் தமிழ் பிரதிநிதி நாடாளுமன்னறம் தெரிவு செய்யப்பாடத நிலை போல் இம்முறையும் 2020 நாடாளுமன்ற தேர்தல் நிலவரமும் அங்கு காணப்பட்டது.இந் நிலையை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?

90 வீதமான வாக்குகள் வழங்கப்படவேண்டிய அம்பாறையில் இம்முறை 65 வீதமான வாக்குகளே அளிக்கப்பட்டது.அதேவேளை இம்முறை தேர்தல் களத்தில் கூட்டமைப்பு சார்பில்  அம்பாறை மாவட்டத்தில் 10 வேட்பாளர்கள் களத்தில் குதித்தனர்.ஆனால் ஓரிருவரைத்தவிர ஏனையவர்கள் மக்களுக்கு அறிமுகமில்லை.சமூகத்தில் பிரபல்யம் அற்றவர்களே களத்தில் நிறுத்தியிருந்தனர்.குறிப்பாக வங்கி வரவு ,தலைமைப்பீட தொடர்புகள் மட்டுமே கூட்டமைப்பின் வேட்பாளர்களின் தகுதியாக கொள்ளப்படுகின்றது
பொதுவாக கட்சி தலைமைகளோடு தொடர்பில் உள்ளவர்களுக்கு ஒவ்வொரு குழுக்கள் இருக்கின்றது.உதாரணமாக கட்சியிலுள்ள x என்ற நபருக்கு ஒரு குழு இருக்கும்அதே போல y என்ற நபருக்கும் ஒரு குழு இருக்கும் இவ்வாறு ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு குழுக்கள் நேரடித் தொடர்பில் இருக்கும்.இக்குழுவில் உள்ள ஒருவரைத்தான் வேட்பாளராக மக்களின் அபிலாசைகள் விறுப்பு வெறுப்புக்காப்பால் கட்சி முடிவெடுத்து தேர்தலில் நிறுத்துகின்றனர்.இதற்கு நல்ல உதாரணமே இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் கூட்டமைப்பால் களமிறக்கப்பட்டவர்கள்.குறிப்பாக கூட்டமைப்பின் பால் களமிறக்கப்பட்டவர்கள் வைத்தியர் என்றார்கள் கலாநிதி என்றார்கள்,சமூகசேவையாளர் என்றார்கள்.அப்படியானால்  வாக்களிப்பு விகிதம் அதிகரித்து உறுப்பினர் ஒருவர் தெரிவுசெய்யப்பட்டு நாடாளுமன்றம் மக்கள் அனுப்பியிருப்பார்கள். பொதுவாக ஏனைய மாவட்ட நிலவரங்களோடு அம்பாறை மாவட்ட த்தை கணிப்பிட முடியாது.அங்கு அந்த நிலைமைக்கும்சூழலுக்கும் ஏற்ற வகையில் தகுதியான வேட்பாளர்கள்களமிறக்கப்பட்டிருக்க வேண்டும்.சமூக சேவை செய்தால்,கலாநிதி,வைத்தியர்  பட்டம் பெற்றால், கோயிலுக்கு ,மைதானத்திற்கு நிதி அன்பளிப்பு செய்தால் மக்கள் தம்மை நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்து விடுவார்கள் என தப்பு கணக்கு போட்டுவிட்டனர்.தகுதியற்ற ஒருவர் வேட்பாளராக அரசியல் களத்தில் நிற்கும் போது வெறுமனே அங்கு காசுக்கும் அரிசிக்கும் சாராயத்துக்கும் சோற்றுப்பார்சலுக்கு மக்களை அடிமைகளாக்குகின்றனர்.இவ்வாற சூழலில் தமக்கான பிரதிநிதியை உரிமையோடும்  உணர்வோடும் தெரிவுசெய்து நாடாளுமன்றத்திற்கு  அனுப்புகின்ற தார்மீக கடமையை மக்கள் எவ்வாறு நிறைவேற்றுவர்.?

கேள்வி_ எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் நீங்கள் போட்டியிடும் வாய்புள்ளதா?அவ்வாறாயின் எந்தக்கட்சியில் போட்டியிவுள்ளீர்கள்.?

கடந்த காலத்தில்  அம்பாறை மாவட்டத்தை பொறுத்த வரையில் நான் விட்ட தவறு இறுதியாக நடைபெற்ற மகாணசபை தேர்தலில் போட்டியிடாமை,ஆனால் எதிர் வரும் மாகாணசபை தேர்தலில் போட்டியிடும்படி எம் உறவுகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.ஆனால் நான் களம் இறங்க விரும்பினாலும் எந்தக்கட்சியில் போட்டியிடுவது என்பதே எனது அடுத்த ஆதங்கமாகும்.காரணம் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒரு வரையறையற்ற வகையில் தேர்தலில் குதித்து ஒரு பிரதிநிதியும் வெற்றி பெறமுடியாத நிலை ஏற்பட்டது.இருப்பினும் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் ஆசனம் அம்பாறைக்கு கொடுக்கப்பட்டு அவ்வெற்றிடம் நிரப்பப்பட்டிருக்கிறது
.ஆனால் இதே நிலைதான் அடுத்துவரும் மகாணசபை தேர்தலிலும் பல கட்சிகள் களம் இறங்கி அங்கு வாக்குகள் பிரிக்கப்பட்டு பிரதிநிதிகள் இல்லாத நிலையே மீண்டும் ஏற்படலாம்.இதேவேளை வீரவசனம் பேசி இதே தகுதியற்றவர்கள் களத்தில் மீண்டும் குதிக்கும் வாய்ப்பும் மிகவும் அதிகம் இருக்கிறது.எனவே இம்முறை அம்பாறை மக்களின் கருத்துகளை உள்வாங்கியவனாக குறிப்பாக இளைஞர்கள்,புத்தி ஜீவிகள்,சமூக ஆர்வலர்கள் ஆகியோரின் கருத்துகளை உள்வாங்கி அவர்களது விருப்புக்கேற்ற வகையில் மக்களின் நன்மைக்காக நிச்சயம் களம் இறங்குவேன்.

கேள்வி_வடகிழக்கில் அரசியலில் பெண்களின் பங்களிப்பு குறைவாக இருக்கின்றதே?

முக்கியமான கேள்வி ஒன்று.தமிழீழ போராட்டம் மௌனிக்கப்பட போதே பெண்களின் பங்களிப்பும் மௌனிக்கப்பட்டுவிட்டது.பொதுவாக தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் அரசியல் ரீதியாக பெண்களின் தலைமைத்துவம் மேலோங்கியிருந்தது.
ஆனால் இன்று அரசியலில் பெங்களின் பங்களிப்பு மிகவும் குறைவாகவே காணப்படுகிறது.கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் கூட இதை அவதானிக்க முடிந்தது.சந்தர்ப்பவசமாக ஓரிருவர் களத்தில் இறக்கப்பட்டாலும் தனித்து ஆளுமையுடன் தேர்தலில் இறங்கவில்லை.பிரதான ஆண் வேட்பாளருக்கு வாக்கு சேகரித்து கொடுக்கும் வாக்கு வங்கியாகவே பாவிக்கப்பட்டனர்.இவ்வாறான சுயநல நோக்கங்கள் மற்றும் அடிமைத்தனம் காரணமாக எமது சமூகத்திலிருந்து பெண் தலைமைகள் உருவாக வாய்பில்லை.இன்று எமது சமூத்தில் ஆளுமைமிக்க பெண்கள் ஒவ்வோர் துறைகளிலும் உள்ளனர்.ஆனால் அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படாது தங்களையும் தங்கள் கட்சிகளையும் வழப்படுத்துவதற்காக பெண்களை பகடைக்காயாக பயன்படுத்துகின்றனர்.இதற்கு அண்மையில் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட ரவிராஜ் சசிகலாவுக்கு நடந்த சம்பவமே சிறந்த உதாரணமாகும்.இது எமது பிரதேசத்தில் மாத்திரமல்ல சிங்கள கட்சிக்குள்ளும் உண்டு.ஆனால் எங்களைப்போல் கேவலமான முறையில் அங்கு இல்லை.இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் எத்தனை பேர் தமது வீட்டு பெண்களை களத்தில் இறக்கி வேலை செய்தனர்? மாற்றம் எமது வீட்டிலிருந்தே ஆரம்பிக்க வேண்டுமே தவிர வெறுமனே மேடைகளில் வீரவசனம் பேசுவதால் மட்டும் மாற்றம் வந்துவிடாது.பெண்கள் அரசியலில் உள்வாங்கப்பட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் அனுப்புவதும் மாற்றத்தின் ஒரு படிதான்.அண்மையில் மாற்றத்துக்காக வேண்டி ஆலையடிவேம்பில் ஒரு கூட்டம் இடம்பெற்றது.அந்த கூட்டத்தில் எத்தனை பெண்கள் உள்வாங்கப்பட்டனர்?இங்கு எல்லாம் சரியான கட்டமைப்பின்றியே நடைமுறைப்படுத்தப் பட்டு வருகின்றது.

கேள்வி_ 3/2 பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்திருக்கும் அரசாங்கத்தின் மூலம் தமிழர்களுக்கான தீர்வு கிட்டுமா?
கிடைத்திருக்கும் என்றால் நிச்சயம் கிடைத்திருக்கும்.ஆனால் எமது ஒவ்வொரு கட்சியும் முட்டி மோதி தங்களது சுய தேவைகளுக்காக ஒன்றிலிருந்து ஒன்று பிரிந்து தமது தேவைகளை நகர்த்துகிறார்களேதவிர தமிழ்மக்களின் பிரச்சனைகளுக்கு  தீர்வுக்காக  வழிமுறைகளை நோக்கி நகர்ந்து செல்லவில்லை.எமக்கு கிடைத்த மிகப்பெரிய சாபக்கேடு கட்சிகள் பிளவு பட்டது.சரியான திட்டமிடல் தயார்படுத்தல் இல்லாமல் பெரும்பான்மையை இழந்து நிற்கின்றது.கூட்டமைப்பு என்பது பல அர்ப்பணிப்புகளுடன் உருவாக்கப்பட்டது.மாமனிதர்கள் பலர் தமது உயிர்களை தியாகம் செய்திருக்கிறார்கள்.இவ்வாறு கட்டமைக்கப்பட்ட கூட்டமைப்பு பல தவறுகளை விட்டிருக்கிறது.கூட்டமைப்பில் நடிப்பவர்களுக்கு பதவிகள் வழங்கப்பட்டிருக்கிறது.அர்பணிப்புடன் சேவையாற்றியவர்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள்.சேவையாற்ற முன்வருபவர்களளுக்கு தட்டிக் கொடுப்பதில்லை.இதனால் பல திறமையும் ஆளுமைமிக்க இளைஞர்களும் சிதறுப்பட்டு  திசை தெரியாமல் இன்று தத்தளிக்கின்றனர்.செய்த தவறுகளை மீண்டும் மீண்டும் செய்கின்றனரே ஒழிய மாற்றீடான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.எனவே யுத்த  முள்ளிவாய்காலை சந்தித்த நாம் இனி அரசியல் முள்ளிவாய்காலை சந்திக்கப்போகின்றோம்.அதேவேளை இந்தியாவை தவிர்த்து எமக்கு எந்த தீர்வும் வராது என சிலர் கருதுகின்றனர் ஆனால் இந்தியா சிறப்பு முகாம் என்ற பெயரில் எத்தனையோ தமிழர்கள் சிறையில் அடைபட்டுள்ளனர்.அவர்கள் இன்னும் விடுதலை செய்யப்படாத நிலையில் உள்னர்.அவ்வாறு இருக்கும் இந்தியா எந்த கருணையின் அடிப்படையில் தமிழர்களின் இன பிரச்சனைக்கு தீர்வு தர முன் வருவர்.இவ்வாறு நாம் பலமிழந்து நிற்பதற்கு எமது கட்சிகளே பொறுப்பு .

கேள்வி_ 2009 வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பில்    அன்றைய சம்பவத்தை சரியானமுறையில் நீங்கள் கையாளவில்லை என்கின்ற குற்றச்சாட்டை ஒரு சாரார் உங்கள் மீது முன்வைக்கின்றனரே?

2009 முள்ளிவாய்கால்   இறுதி யுத்தத்தின் போது அரசாங்கத்தோடும் விடுதைப்புலிகளோடும் சர்வதேசத்தோடும் நேரடித்தொடர்பில் இருந்தவன் நான்.ஆனால் எங்கள் மத்தியிலிருந்து வீரச்சாவடைந்த ஊடகவியலாளர் மேரின் கொள்வின் உயிருடன் இருந்திருந்தால் முள்ளிவாய்காலில் எனது பங்களிப்பு என்ன என்பதை அவர் விளக்கியிருப்பார்.தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என தம்மை சொல்லிக்கொள்ளும் கூட்டமைப்பினர் முள்ளிவாய்கால் இறுதிக்கட்டத்தில் மக்கள் கொத்துகொத்தாக இறந்து கொண்டிருந்தபோது தமது தொலைபேசிகளை நிறுத்தி வைத்துவிட்டு தமது பொறுப்புக்களில் இருந்து நழுவி மௌனமாக இருந்துவிட்டனர்.முள்ளிவாய்காலிலில் நினைவேந்தலுக்கு விளக்கேற்ற முட்டி மோதும் தேசியவாதிகள் யாரும் அன்று என்னுடன் இல்லை.ஆனால் என்மீது பழி சுமத்தும் ஒரு சாராரும் அன்று என்னுடன் இல்லை குற்றம் சுமத்துபவர்கள் குற்றம் சுமத்திவிட்டு போகட்டும் அதைப்பற்றி எனக்கு கவலையில்லை.ஆனால் முள்ளிவாய்காலில் நடந்த அநீதிகளை எழுத பயந்த ஊடகவியலாளர்கள் இன்று முள்ளிவாய்காலைப்பற்றி பேசுகின்றார்கள்.இதன் தாக்கங்கள் 2010 லிருந்து அரசியலில் எனக்கெதிராக பேசப்பட்டன.அரசாங்கத்தின் ஆள்,ஆமியின் ஆள் என எனக்கெதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு அரசியலில் பழிவாங்கப்பட்டேன்.இதன் தாக்கம்  2010 நாடாளுமன்ற தேர்தலில் 200 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டேன்.ஆனால் முள்ளிவாய்காலும் அதற்கு பின்னரும் எவ்வகையான பிரச்சனைகளையும்  அச்சுருத்தல்களையும்
முகம்கொடுத்திருப்பேன் என்பது எனக்கு மட்டுமே தெரியும். 

கேள்வி_ ஜனாதிதியின் தொல்பொருள் செயலணிகுழுவின் பார்வை அம்பாறை நோக்கியதாக காணப்படுகிறது.இந்த சவாலை எவ்வாறு அணுகலாம் ?

தமிழ்மக்களின் நிலங்கள் பற்றியும் அவர்களின் வாழ்விடங்கள் பற்றியும் அவர்களது கலாசாரங்கள் பற்றியும் தெரியாதவர்களே அதிகமாக உள்ளனர்.அதேவேளை கடந்த இரண்டு வருடங்களில் தமிழர்களுக்கு என்னென்ன பிரச்சனைகள் கொண்டுவரப்பட்டுள்ளது தமிழர்களுடைய வாழ்விடங்கள்,தொல்லியல் இடங்கள் எவ்வாறு கையகப்படுத்தப்பட்டுள்ளது என்பது தொடர்பிலும் தெரியாதவர்களே களத்தில் உள்ளனர்.ஆனால் இதை இலகுவாக கடந்து செல்லும் விடயமல்ல .நாடாளுமன்றம் செல்பவர்கள் இது தொடர்பில் நிச்சயம் பேசுவார்கள் எனவும் நாம் எதிர்பார்க்க முடியாது.பூர்வீக அறிவியல் வரலாற்று  ஆய்வாளர் ,புத்திஜீவிகள் என்பவர்களின் ஆலோசனைகளை பெற்று ஒற்றுமையுடன் ஒன்றிணைந்து குரல் கொடுப்போமேயானால் இவ்விடயத்தை இலகுவாக கையாளலாம்.

கேள்வி_ முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் அம்பாறை மக்களுக்கு கூற விளைவது?
என் அனுபவத்தின் படி நாடாளுமன்ற உறுப்பிராக இருக்கலாம்.ஆனால் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக இரு ப்பதே கஷ்டம்.நடந்தது நடந்து முடிந்து விட்டது .எனவே அம்பாறை மாவட்ட தமிழர்களாகிய நாம் ஒற்றுமையுடன் பயணித்தால் மட்டுமே  எமக்கான இலக்கை அடைய முடியும்.புலிப்படையாக இருந்த நாம் இன்று பூனைப்படையாக தேய்ந்து  மாற்றம் பெற்றிருக்கின்றோம்.எனவே வருகின்ற மகாணசபையையாவது எமது கைகளுக்குள் உள்வாங்க வேண்டும்.மக்கள் நலன் சார்ந்து செயற்படக்கூடியவர்களை உள்ளீர்த்து வேலைப்பாடுகளை முன்னெடுத்தல் நன்று என கருதுகின்றேன்.மண் மாபியாக்கள்.,ஆட்கடத்தல்காரர்கள்,ஒப்பந்தகாரர்கள்,கொலை செய்தவர்கள் ,அறிக்கை விடுபவர்கள் என தெரிவுசெய்து வரலாற்று தவறுகளை மண்டும் செய்யாமல் சமூகம் சார்ந்து செயல்படக்கூடிய இளைஞர்களுக்கு வாய்ப்புகளை கொடுப்போம்.கோழைகள் வேண்டாம்."எங்கும் செல்வோம் எதிலும் வெல்வோம்".

No comments: