சரித்திரம் படைத்து கண்டி மாவட்டத்திலும் அமோக வெற்றி பெறுவோம் -பாரத் அருள்சாமி
(க.கிஷாந்தன்)

நாவலப்பிட்டிய தொகுதியில் சரித்திரம் படைத்து கண்டி மாவட்டத்திலும் அமோக வெற்றி பெறுவோம். மஹிந்தானந்த அளுத்கமகே முதலிடம் பிடிப்பார். அவருடன் உங்கள் ஆதரவோடு என்னையும் உங்கள் பிரதிநிதியாக பாராளுமன்றம் அழைத்துச்செல்வார். எனவே, தமிழ் பேசும் மக்கள் எமக்கு பேராதரவை வழங்கவேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட தமிழ் வேட்பாளர் பாரத் அருள்சாமி தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தமது அரசியல் வாழ்வில் 30 வருடத்தை பூர்த்தி செய்துள்ளமையை முன்னிட்டு அவருக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்வு நாவலப்பிட்டி வாழ் தமிழ் மக்களின் ஏற்பாட்டில் நாவலப்பிட்டி நகரில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கண்டி மாவட்ட தமிழ் வேட்பாளர் பாரத் அருள்சாமியும் கலந்து கொண்டார். இதன்போது அவர் மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கண்டி மாவட்டத்துக்கும் எனக்குமிடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது. நான் பிறந்ததுகூட நாவலப்பிட்டிய வைத்தியசாலையில்தான். இன்று அந்த நாவலப்பிட்டிய நகருக்கு வேட்பாளராக வந்துள்ளேன். எனக்கு ஆதரவு வழங்குமாறு மஹிந்தானந்த அளுத்கமகேயும் கோரிக்கை விடுத்துள்ளார். எனவே, நான் நிச்சயம் வெற்றிபெறுவேன்.

கண்டி மாவட்டத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் வாக்காளர்கள் இருக்கின்றனர். எனவே, தமிழ்ப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் அவசியம் என்பதாலேயே எங்கள் தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் வழிகாட்டலுடன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டேன். ஜனாதிபதியும் பிரதமரும் எனக்கு முழுமையான ஆதரவை வழங்கினார்கள். தற்போது எமது பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தலைமையில் வெற்றிகரமாக பிரச்சாரத்தை முன்னெடுத்துவருகின்றேன்.

கண்டி மாவட்டத்தில் ஆளுங்கட்சியின் சார்பில் போட்டியிடும் ஒரேயொரு தமிழ் வேட்பாளர் நான்தான். இளம் வேட்பாளராகவும் இருக்கின்றேன். இந்நிலையில் இந்த சின்னபையன் என்ன செய்யப்போகின்றார் என சிலர் விமர்சனங்களை முன்வைத்தனர். ஆனால், எனது தலைவர் ஆறுமுகன் தொண்டமான் என்னை உற்சாகப்படுத்தினார். இன்று மஹிந்தானந்த அளுத்கமகேயும் முழு ஆதரவையும் வழங்கியுள்ளார்.

நான் பல்கலைக்கழகத்துக்கு சென்றுவரும்போது நாளுக்கு நாள் நாவலப்பிட்டிய பகுதியில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். பல அபிவிருத்தி திட்டங்களை மஹிந்தானந்த முன்னெடுத்திருப்பார். ஒரு அரசியல்வாதியால் இப்படியும் செய்யமுடியுமா என்ற ஆர்வம் என்னுள் வந்தது. அரசியலுக்கு வருவதற்கு இதுவுமொரு காரணமாகும். 4 விடயங்களை முன்னிலைப்படுத்தியே எனது பிரச்சாரம் அமையும். நிலைபேண்தகு அபிவிருத்தியே இலக்காக இருக்கின்றது.

மஹிந்தானந்தவின் அரசியல் கோட்டைதான் நாவலப்பிட்டிய தொகுதி. அந்த தொகுதியில் எனக்கு விருப்பு வாக்கை வழங்குமாறுகோரி தனது உயரிய தன்மையை வெளிப்படுத்தியுள்ளார். அவர் சிறந்த அரசியல் தலைவர். நல்லிணக்கத்தின் அடையாளம். நாவலப்பிட்டியவில் சரித்திரம் படைத்து கண்டியிலும் பெரு வெற்றியை பெறுவோம்." - என்றார்.

No comments: