சிறந்த ஒரு தலைவரை மலையகம் இழந்துவிட்டது -நாளை இறுதிக்கிரியை


இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும்இ தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான பலம்பெறும் அரசியல்வாதி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தனது 55வது வயதில் காலமாகி உள்ளார். 1964 மே 29 ஆம் திகதி பிறந்த இவர் 56 வயதைப் பூர்த்தி செய்வதற்கு 3 நாட்கள் இருந்த நிலையில் காலமானார்.


மாரடைப்பு காரணமாக கொழும்பு - தலங்கம வைத்தியசாலையில் 26.05.2020 அன்று அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே அவர் காலமானார். கடந்த சுமார் 20 வருடகாலமாக பல்வேறு அமைச்சுப் பொறுப்புக்களையும் வகித்த இவர் தற்போதைய அரசாங்கத்தில் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராக பதவி வகித்தார். 1964 ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி இலங்கை தொழிலாளர் காங்கிரசின் இஸ்தாபகத் தலைவரான அமரர் செளமிய மூர்த்தி தொண்டமானின் பேரனாகிய ஆறுமுகன் தொண்டமான் இலங்கை மலையக மக்கள் மட்டுமன்றி இந்திய வம்சாவளி மக்களின் அரசியல் தலைவராக கருதப்படுகிறார். இவரது இழப்பானது மலையக மக்களுக்கு பேரிழப்பாகும்.

' மக்களை ஆளவேண்டும் என நினைப்பதை விட மக்கள் வாழ வேண்டும் என்று நினைப்பதே மக்கள் தலைவன். '

தலைவர் ஆறுமுகன் தொண்டமான் அரசியல் வாழ்க்கையில் 30 ஆண்டுகளை எட்டிப்பிடித்திருக்கின்ற இவ்வேளையில்இ அரசோடு இணைந்து மலையக சமூகம் ஏனைய சமூகங்களை போல் சகல துறைகளிலும் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற இலட்சிய நோக்குடனேயே இதுவரை செயல்பட்டு வந்தவராவார். 


இவரது தலைமையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பதித்த வெற்றிகள் ஏராளம். 1990ஆம் ஆண்டு இ.தொ.காவின் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். 1993ஆம் ஆண்டு இ.தொ.கா வில் உத்தியோகபூர்வ நிதிச் செயலாளராகவும் 1994ஆம் ஆண்டு பொதுச் செயலாளராகவும் பதவியேற்றார். 

இவ் ஆண்டிலேயே முதற் தடவையாக பாராளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் களமிறங்கி 74000 வாக்குகளைப் பெற்றார். அதன் பின்னர் 2000 2004, 2010 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் நடைப்பெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றிபெற்றது மாத்திரமின்றி மலையகத் தமிழ் பிரதிநிதிகளில் ஒவ்வொரு தேர்தலிலும் அதிகப்படியான வாக்குகளைப் பெற்றவர் என்ற பெருமையும் தொண்டமானுக்கே உண்டு. 


2000 ஆம் ஆண்டில் தொழிற்சங்கத்தின் தலைமையை ஏற்ற இவர் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வில் முதலாளிமார் சம்மேளத்துடன் நடத்திய பேச்சு வார்த்தையின் பயனாக 20 வீத சம்பள அதிகரிப்பை பெற்றுக் கொடுத்துள்ளார். அதே ஆண்டில் பொதுஜன ஐக்கிய முன்னணியோடு முதன் முதலாக போட்டியிட்டாலும் கூட தேர்தலில் 4 ஆசனங்களைப் பெற்று அவ்வரசியலிலும் அரசை நிர்ணயிக்கும் சக்தியாக தெண்டமானே விளங்கினார். 

பாராளுமன்றத்தில் 17ஆவது அரசியல் யாப்பு திருத்தம் முன்வைக்கப்பட்ட போது முதல் முறையாக இந்திய வம்சாவளி மக்கள் தனி தேசிய இனமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு இந்திய வம்சாவளி பிரதிநிதி ஒருவர் அரசியலமைப்பு சபையில் அங்கம் வகிக்கும் அந்தஸ்தை நிலை நாட்டினார்.


 அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் கொள்கைப்படி ஆளும் கட்சிகளில் பங்காளியாவதன் மூலமே மலையகத்தின் அபிவிருத்திக்கு உறுதுணை புரிய முடியும் என்பதற்கேற்ப ஆறுமுகன் தொண்டமானும் ஆளும்கட்சி எதுவென்றாலும் அதில் அங்கத்துவம் பெற்றாலும் மலையக மக்கள் நலனை முன்னிலைப்படுத்தி ஆளும் கட்சியை எதிர்க்கவும் இவர் தவறியதில்லை.

1996 ஆம் ஆண்டு சம்பள ஒப்பந்தத்தின் போது தொழிலாளர் கோரிக்கைக்கு செவிசாய்க்கத் தவறிய தொழில் அமைச்சுக்கு எதிராக நம்பிக்கை இல்லாப் பிரேரணையொன்றை பாராளுமன்றத்தில் முன்வைத்ததை மறக்க முடியாத நிகழ்வொன்றாகும். 

 2003 ஆம் ஆண்டு மலையக மக்களின் முக்கிய பிரச்சினையாக விளங்கிய பிரஜாவுரிமை விடயத்தையும் இந்திய கடவுச்சீட்டு பெற்றவர்களையும் இலங்கை பிரஜைகளாக அங்கிகரிக்கும் விஷேட சட்ட மூலத்தை அரசாங்கம் கொண்டு வருவதற்கு மூலக்காரணமாக இருந்துள்ளர். 

 1996 இல் கால்நடை அபிவிருத்தி மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராகவும் 2001 ஆம் ஆண்டு வீடமைப்பு மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராகவும் தொடர்ந்து 2006 ஆம் ஆண்டு இளைஞர் வலுவூட்டல் அமைச்சராகவும் பதவி வகித்து மலையக மக்களினது பல்வேறு தேவைகளை நிவர்த்தி செய்தவர் ஆறுமுகன் தொண்டமான் ஆவார். 


2010 ஆம் ஆண்டு கால்நடைவள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சராகவும் பதவி வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 3179 மலையக ஆசிரியர் நியமனங்கள் மற்றும் 500 தபால் சேவை ஊழியர் நியமனங்கள் என்பன ஆறுமுகன் தொணடமானின் அணுகுமுறையால் மலையக மக்களுக்கு கிடைத்த முக்கியமான சேவைகளாகும்.

மலையக மாணவர்களின் நலன் கருதி தொண்டமான் பயிற்சி நிலையம் ஒன்று ஹட்டனில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் அதிகமானோர் தேசிய தொழிற் தகைமையை பெற்று வெளியேறுகின்றனர். இத்திட்டம் கூட இவரது முயற்சியாலே தொடர்ந்து நடைபெறுகின்றது. 

அத்துடன் புசல்லாவ ரம்பொடை பகுதியில் இசை மற்றும் நடன துறையில் பயிற்சிகளை வழங்க நிலையம் ஒன்று காணப்படுகின்றமை முக்கியமான ஒன்றாகும். இவ்வாறாக கல்வித்துறைக்கும் இவரது பங்களிப்புக்கள் அதிகமாவே காணப்படுகின்றது.

மலையகத்தில் எத்தனை கட்சிகள் உருவாகினாலும் எத்தகைய பிரயத்தனங்கள் செய்தாலும் மக்களினுடைய செல்வாக்கை பெற்ற ஒருவராவார். 2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் 60 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்று நுவரெலியா மாவட்டம் சார்பாக பாராளுமன்றம் தெரிவானார். 


இத்தேர்தலில் ஆளும் கட்சி மலையக மக்களின் செல்வாக்கை இழந்திருந்தது. ஆனால் கடந்த (2019) வருடம் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் மீண்டும் இவர் சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சராக பொறுப்பேற்றார். 

இவர் இறக்கும் வரை அமைச்சராகவே காணப்பட்டார். இறக்கும் தினத்தில் இந்திய வெளிவிவகார அலுவலகத்தில் மலையகத்திற்கான 10000 இந்திய வீடமைப்பு திட்டம் தொடர்பாகவும் கலந்துரையாடியிருந்மை குறிப்பிடத்தக்கது. இலங்கையில் பல்வேறு அமைச்சு பொறுப்புகளை வகித்து வந்த அவர் இறுதியாக தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சினை வகித்து இறுதி வரை மலையக மக்களுக்கு தனது சேவையினை வழங்கிய மாபெரும் தலைவராக திகழ்ந்துள்ளார். 

அண்மைக்காலங்களில் இவரது மகன் ஜீவன் தொண்டமான் அரசியல் சார்பான நிகழ்வுகளில் பங்குபற்றியிருந்தமை முக்கியமான அம்சமாகும். தந்தையின் கொள்கையினை சிறந்த முறையில் மலையக மக்களுக்கு வழங்கக்கூடியவராக காணப்படல் வேண்டும். 


இவரது மறைவு மலையக மக்களுக்கு பெரியதொரு இழப்பாகும். மீண்டும் இவரை போல ஒரு தலைவர் வருவதற்கு எத்தனை காலம் செல்லும் என்று தெரியவில்லை. மலையகத்தில் தனித்து தடம் பதித்தவராவார். 

செயல் வீரராய்இ துணிச்சல் மிக்கவராய்இ சகல சமூகத்தையும் நேசித்தவராய் திகழ்ந்த அமரர் ஆறுமுகன் தொண்டமான் எப்பொழுதும் மக்களின் மனதில் வாழ்ந்துக்கொண்டிருப்பார். 30 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் பயணத்தை பல்வேறு வெற்றிகளுடன் கடந்துள்ள அமரர் ஆறுமுகன் தொண்டமானின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.

வி.பிரசாந்தன்
தலவாக்கலை

No comments: