காங்கிரஸ் கல்வியியல் ஒன்றியத்தின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது


(பி.கேதீஸ்)
மலையக கல்வி வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி மலையக கல்வியை உயர்வடையச் செய்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் காங்கிரஸ் கல்வியியல் ஒன்றியத்தின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமானின இழப்பு மலையக கல்விக்கு வளர்ச்சிக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும் என காங்கிரஸ் கல்வியியல் ஒன்றியத்தின் நிதிச்செயலாளர் வையாபுரி சசிக்குமார் தெரிவித்தார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் காங்கிரஸ் கல்வியியல் ஒன்றியத்தின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவையொட்டி அவர் விடுத்திருக்கும் இரங்கல் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

மலையக கல்விக்கு வித்திட்டவர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் சௌமிய மூர்த்தி தொண்டமான் ஆவார். 

அவரின் வழியில் வந்த மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமான் மலையக கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு சாதனைகளை செய்தவர். மலையக கல்வி வளர்ச்சியில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியவர்.

 அன்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் சௌமிய மூர்த்தி தொண்டமான் எண்ணியவாறு இன்று வரை மலையகத்தில் கல்வியில் பல்வேறு மாற்றங்கள் ஏற்ப்பட்டுள்ளது.

 அவர் கண்ட கனவை இன்று நனவாக்கியவர் மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமான்.

மறைந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் ஆளுமையினாலும் வழிகாட்டலின் ஊடாகவும் முறையாக மத்திய மாகாணத்திலும் ஊவா மாகாணத்திலும் தமிழ் கல்வி அமைச்சு இயங்கியது. மலையக மக்கள் ஏனைய சமூகத்திற்கு மத்தியில் கல்வியில் வளர்ச்சியடைந்து ஏனைய சமூகங்களுக்கு நிகரான சமூகமாக வாழ்வதற்கு பெரும் பாடுபட்டவர் மறைந்த தவைர் ஆறுமுகன் தொண்டமான். 

நாம் வாயினால் சொல்வதை விட இன்று முழு மலையகமே புரிந்துக்கொண்டுள்ளது. இன்று எமது சமூகத்தை சேர்ந்தவர்களே ஆசிரியர்களாகவும் அதிபர்களாகவும் பல்வேறு துறைசார்ந்த அறிவியலாளர்களாகவும் திகழ்கின்றனர். 

இன்று மலையக பாடசாலைகளிலே கல்வி பெறுபேறுகளை பார்க்கும்போது வியக்கத்தக்கதாக இருக்கின்றது. அன்று எம்மிடம் இருந்தது ஆசிரியர் தொழில் மட்டுமே. 1982 ம் 1983ம் ஆண்டுகளில் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களால் அதன்பிறகு பல்வேறு ஆசிரியர் நியமனங்கள், ஏனைய அரச நியமனங்கள் மலையகத்திற்கு இ.தொ.காவினால் பெற்றுக்கொடுக்கப்பட்டன. 

இந்நியமனங்கள் அரசியல், கட்சி பேதமின்றி அனைவருக்கும் பெற்றுக்கொடுக்கப்பட்டன. 2007 ம் ஆண்டு 3179 ஆசிரியர் நியமனம் அண்மையில் உதவி ஆசிரியர் நியமனம், தபாற்கந்தோர்களுக்கு உத்தியோகத்தர்கள் நியமனம்,கிராம உத்தியோகத்தர்கள் நியமனம், 

மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் நியமனம் என எண்ணில் அடங்காத நியமனங்களை பெற்றுக்கொடுத்த பெருமை மறைந்த அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் காங்கிரஸ் கல்வியியல் ஒன்றியத்தின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமானையே சாரும். ஒரு மாபெரும் சகாப்தத்தின் மறைவு மலையக மக்களின் வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

No comments: