"கொரோனோ தொற்றில் தமிழ்நாடு இன்னும் இரண்டாம் கட்டத்திலேயே இருக்கிறது"




தமிழ்நாட்டில் இன்று மேலும் 77 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் நிலையில், அந்நோய் பரவுவதில் தமிழ்நாடு இன்னும் இரண்டாம் கட்டத்திலேயே இருப்பதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா நோய்த் தொற்று தொடர்பாக தமிழக அரசின் சார்பில் தினமும் மாலையில் சுகாதாரத் துறைச் செயலர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களைச் சந்தித்து தகவல்களைத் தெரிவிப்பது வழக்கம். ஆனால், இன்று தமிழக தலைமைச் செயலர் கே. சண்முகம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
"தமிழக அரசின் பிரதானமான நோக்கம் இந்த நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதுதான். அதற்காகத்தான் இந்த ஊரடங்கு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. முடக்கப்பட்ட பகுதிகளுக்கு வெளியில் எதுவும் வந்துவிடாத வகையில் நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம். இன்று 77 பேருக்கு புதிதாக நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. 77 பேரில் 5 பேர் முதன்மை நோய்த்தொற்றாளர்கள். மீதமுள்ள 72 பேருக்கு மற்றவர்களிடமிருந்து பரவியது. இருந்தபோதும் 77 நோயாளிகளும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியிலிருந்துதான் வந்தவர்கள். ஆகவே இந்நோய் பரவல் இரண்டாம் கட்டத்தில்தான் இருக்கிறது" என்று தெரிவித்தார் தலைமைச் செயலர்.
இன்று குறிப்பிடப்பட்ட 5 முதன்மைத் தொற்றாளர்களிடமிருந்து 72 பேருக்கு வரவில்லை. ஏற்கனவே இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்துதான் 72 பேருக்குப் பரவியது என்றும் தலைமைச் செயலர் விளக்கினார்.
"இந்நோய் சமூகத் தொற்றாக மாறுகிறதா என்று கண்காணிக்க தமிழ்நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் Severe Accute Respiratory infection என்று சொல்லக்கூடிய தீவிர மூச்சுக் குழாய் தொற்று ஏற்பட்டிருப்பவர்கள் அனைவருக்கும் கொரோனா சோதனை செய்யப்படுகிறது. அதில் யாருக்காவது கொரோனா நோய்த் தொற்று இருக்கிறதா என்று பார்ப்போம். கடந்த 24 மணி நேரத்தில் 71 பேருக்கு இந்த சுவாசக் குழாய் தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு கொரோனா சோதனை செய்ததில் யாருக்கும் கொரோனா இல்லை. இதில் 5 பேருக்கு முடிவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன.


No comments: