காத்தான்குடி பள்ளிவாசல் விவகாரம் - ஹக்கீம் துரித நடவடிக்கை

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)


தற்போது காத்தான்குடியில் மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள அங்கு அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்பட்டுள்ள தாருல் அதர் பள்ளிவாசலை விடுவிப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் துரித நடவடிக்கை எடுத்துவருகிறார். வெள்ளிக்கிழமை (3) ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவையும் அவர் சந்தித்து அதுபற்றி உரையாடியுள்ளார்.

காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஊடாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதமொன்றை கையளித்திருந்த நிலையிலும், சர்வகட்சி மாநாட்டின் போது அவர் ஜனாதிபதியிடம் அதன் அவசியம் பற்றி வலியுறுத்தியிருந்த நிலையிலும் இணக்கப்பாடு ஏற்பட்டிருக்கத்தக்கதாக அங்கு திடீரென பெருமளவில் பொலிசார் குவிக்கப்பட்டதையடுத்து மக்கள் மத்தியில் பதற்றம் நிலவுகின்றது.

இந்த விடயம் ரவூப் ஹக்கீமின் உடனடிக் கவனத்திற்கு கொண்டுவரப் பட்டதைத் தொடர்ந்து அவர் ஜனாதிபதி, சுதந்திர தினம் முதலான அலுவல்களில் ஈடுபட்டுள்ளதால் அவரது செயலாளரை நேரில் சந்தித்து பிரஸ்தாப பள்ளிவாசலை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலிருந்து முற்றாக விடுவித்து விடுமாறு கோரியுள்ளார்.

உடனே ஜனாதிபதியின் செயலாளர், முன்னர் கையளிக்கப்பட்ட காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் கடிதத்தை பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பியுள்ளதோடு, அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டிருப்பதன் காரணமாக அதனை ரத்துச் செய்து மீண்டுமொரு வரத்தமானி அறிவித்தலை வெளியிட்ட பின்னரே உரிய முறையில் அதனை மக்கள் பாவனைக்கு விடுவிக்க முடியும் என ஹக்கீமிடம் தெரிவித்துள்ளார்.

அதற்குமுன்னதாக, தேசியபாதுகாப்புச் சபை கூட்டத்தில் அது பற்றிய தீர்மானம் மேற்கொள்ளப்பட வேண்டியிருப்பதால் அதன் அடுத்த கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரலில் இந்த விடயத்தையும் இடம்பெறச் செய்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அப்பள்ளிவாசலை தடை செய்வது முறையற்ற செயல் எனச் சுட்டிக்காட்டியுள்ள முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பயங்கரவாதி சஹ்ரான் தாருல் அதர் இயக்கத்திலிருந்து அவனது அதி தீவிரவாத செயற்பாடுகள் மற்றும் கருத்து முரண்பாடுகளின் பின்னர் விலக்கப்பட்டிருந்தாகவும், அங்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்பது தடைசெய்யப்பட்டிருந்ததாகவும் இவ் இயக்கத்தினர் சுட்டிக் காட்டியுள்ளனர்.

 இந்நிலையில் ஆரம்பக் கட்டத்தில் சஹ்ரான் தொடர்புபட்டிருந்ததை மட்டும் அடிப்படையாக வைத்து, பயங்கரவாதத்துடன் எந்தத் தொடர்புமில்லாத இந்த பள்ளிவாயலை பொதுமக்கள் தங்களது ஆன்மீக செயற்பாடுகளுக்கும் தொழுகைக்கு பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் பள்ளிவாயல் கைப்பற்றப்பட்டு பொலிசாரிடம் கையளிக்கப்படுவது கவலைக்குரியது என்றும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மேலும் சுட்டிக் காட்டியுள்ளார்.

அங்கு நிலைகொண்டிருக்கும் பொலிசாரை அவ்விடத்திலிருந்து அகற்றி, தாருல் அதர் பள்ளிவாசலை காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா சபையினரின் நேரடி மேற்பார்வையில் அப்பிரதேச முஸ்லிம்களின் தொழுகை மற்றும் ஆன்மீக நடவடிக்கைகளுக்கு மீளக் கையளிப்பதே இன்றைய சூழ்நிலையில், நல்லிணக்க முயற்சிகளுக்கு பெரிதும் உதவியாக இருக்குமென முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் ஜனாதிபதியின் செயலாளரிடம் வலியுறுத்தியுள்ளார்.


No comments: