களுத்துறையில் மாணவர் ஒருவரை கடுமையாகத் தாக்கிய பிக்கு கைது.

கடந்த 20ஆம் திகதி பேருவளை பாடசாலை ஒன்றில் 7ஆம் ஆண்டு கல்வி கற்கும் மாணவனை  கொடூரமாக தாக்கிய குற்றச்சாட்டில் குறித்த பாடசாலையின் ஆசிரியரான  பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டதாக பேருவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.   பாடசாலையில் ஒரே வகுப்பில் கல்வி கற்கும் இரு மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலையடுத்து, வகுப்பு ஆசிரியரான பிக்கு குறித்த மாணவனை  கொடூரமான முறையில் தாக்கித் தண்டித்ததாக மேற்படி மாணவனின் தாயார் பேருவளை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.


 குறித்த பாடசாலையின் பிரதி அதிபர் மற்றும் ஆசிரியை ஒருவரிடமிருந்து வாக்குமூலங்களை பெற்றுக்கொண்டதன் பின்னர் குறித்த பிக்கு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.  தாக்குதலுக்கு உள்ளான மாணவனுக்கும் அதே வகுப்பைச் சேர்ந்த மற்றுமொரு மாணவனுக்கும் இடையில் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாகவே இந்த மாணவன் தாக்கப்பட்டதாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


 குறித்த மாணவன் தற்போது களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், தாக்குதலுக்கு உள்ளான மாணவன் பேருவளை பொலிஸ் பிரிவில் வசிப்பவர் எனவும் சந்தேகநபர் ஒரு பிக்கு எனவும், அவர் வேறு பொலிஸ் பிரிவை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் களுத்துறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.



No comments: