2023 சனிப்பெயர்ச்சி பலன் விருச்சிராசியினருக்கு எவ்வாறு அமையும்

 

விருச்சிகம்

 (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) மனதில் பட்டதை மறைக்காமல் அப்படியே பேசும் நீங்கள், அன்புக்கு அடிமையாவீர்கள். மற்றவர்களை உடனே நம்பி உதவி செய்து, தர்மசங்கடத்தில் சிக்கிக் கொள்வீர்கள். சட்ட திட்டங்களை சரியாக பின்பற்றும் நீங்கள், வரம்பு மீறி பழகமாட்டீர்கள். இலவசமாக எதையும் பெறமாட்டீர்கள்.

இதுவரை ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்ந்த சனிபகவான் இப்போது திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 17.01.2023 முதல் 29.03.2025 வரை உள்ள காலகட்டங்களில் சுக வீடான 4-ம் வீட்டில் அமர்வதால் கொஞ்சம் அலைச்சல் இருக்கத்தான் செய்யும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவத்தை பெறுவீர்கள். 

சனி ஆட்சிப் பெற்று அமர்வதால் குடும்பத்தில் மனைவியின் கை ஓங்கும். சொந்த ஊரை விட்டு இடம் பெயர்வீர்கள். அர்த்தாஷ்டமச் சனியாக அமர்வதால் சின்ன சின்ன வேலைகளைக் கூட அலைந்து முடிக்க வேண்டி வரும். தவிர்க்க முடியாத செலவுகள் அதிகரிக்கும். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கிக் கொள்வீர்கள்.  

எந்த விஷயத்திலும் கூட்டு வேண்டாம். மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். வீடு வாங்குவது, கட்டுவது கொஞ்சம் இழுபறியாகி முடியும். அதிக வட்டிக்கு கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. எந்த சொத்து வாங்கினாலும் தாய் பத்திரத்தை சரி பார்ப்பது நல்லது.

அரசு விஷயங்களில் அலட்சியம் வேண்டாம். புது வண்டியாக இருந்தாலும் கூட அடிக்கடி பழுதாகும். இரவு நேர பயணங்களில் கவனம் தேவை. தாயாருக்கு சிறு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வரும். தாய்வழி சொத்துகளில் சிக்கல்கள் வரக்கூடும். அரசின் அனுமதி பெறாமல் கூடுதல் தளங்கள் அமைத்து வீடு கட்ட வேண்டாம். 

வழக்கில் தீர்ப்பு தாமதமாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த விசா கிடைத்து அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். பிள்ளைகள் கொஞ்சம் செலவு வைப்பார்கள். அவர்களின் நடவடிக்கையில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

சனிபகவானின் பார்வைப் பலன்கள்: 

சனிபகவான் உங்கள் ராசியை பார்ப்பதால் அவ்வப்போது சோர்வு, களைப்பு வந்து நீங்கும். அவ்வப்போது கோபப்படுவீர்கள். சனிபகவான் உங்களின் 6-ம் வீட்டை பார்ப்பதால் பணவரவு அதிகரிக்கும். பழைய பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். நிலுவையிலிருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். சனிபகவான் 10-ம் வீட்டை பார்ப்பதால் உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். வேலை மாறுவீர்கள். புது பொறுப்புகளும் உங்களை நம்பி தரப்படும்.

No comments: