மட்டக்களப்பில் எரிபொருளை பதுக்கி வைப்பதற்கு தடை

(கனகராசா சரவணன்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் எரிபொருள்களை பதுக்கி வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் அனைவருக்கும் எரிபொருள் சீரான முறையில் வழங்குவதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு அதற்கான 6 தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக மட்டு மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன் அறிவித்துள்ளார்.

உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் கடித மூலமான அறிவுறுத்தலுக்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கையை கண்காணித்தல் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (8) இடம்பெற்ற அரசாங்க அதிபர் தலைமையில் கலந்துரையாடல் 6 தீர்மானங்கள் எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது

சகல எரிபொருள் நிலையங்களிலும் அரச வாகனங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தேவைகளை நிறைவேற்றுதல் இலகுவாக நடைமுறைப்படுத்த காலை 8 மணி தொடக்கம் பகல் 12 மணிவரை நேர இடைவெளியில் வாகனுங்களுக்கு எரிபொருளை நிரப்புதல்.

தற்போதைய நிலையில் சிறுபோக பயிர்ச் செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதனால் வழமைக்கு மாறாக எரிபொருள் தேவை அதிகரித்ததன் காரணமாக எதிர்வரும் 2-3 வாரத்துக்குள் எரிபொருள் நெருக்கடியை தவிர்க்கும் முகமாக தனியாள் ஒருவர் தனது பொருளாதார ஃ அத்தியாவசிய தேவை தவிர்ந்த வேறு நோக்கங்களுக்காக கொள்கலங்களில் எரிபொருள் நிரப்புவதை மட்டுப்படுத்துவதற்கு பொலிசாரின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ளுவதாகவும்.

மனைப்பொருளாதாரத்தை ஊக்கிவிப்பதும் விவசாயம், கடற்தொழில், சிறுகைத்தொழில் முயற்சியாளர்களுக்கு தேவையான எரிபொருள் வழங்குவது அவசியமென்பதனால் இதனை குறித்த பகுதி துறைசார் அதிகாரிகளின் சிபார்சுடன் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோட்டுக் கொண்டுள்ளதாகவும்.

மேற்குறித்த 3 விடையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளமை தவிர்ந்த ஏனைய விடையங்க ளுக்காக எரிபொருளை கொள்வனவு செய்து பதுக்கி வைப்பதை தடை செய்வது பொலிசாரின் கடமை என்பதால் அவர்கள் மூலம் இதனை நிறைவேற்றுதல்

எரிபொருள் சீரான விநியோகம் சம்மந்தமாக பிரதேச மட்ட எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களை அழைத்து அவர்களின் ஒத்துழைப்புடன் சரியான பெறிமுறை ஒன்றை நடத்திச்செல்லுதல்.

மற்றும் போக்குவரத்து அனுமதிப்பத்திரம் உள்ள தனியார் பேருந்துக்கள் தமக்கு தேவையான எரிபொருளை இலங்கை போக்குவரத்து சபையில் அமைக்கப்பட்டுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பணம் செலுத்தி கொள்வனவு செய்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது போன்ற 6 தீர்மானங்கள் எடுக்கப்பட்டு அந்த தீர்மானங்களை சகல பிரதேச செயலாளர்களுக்கும், மாவட்ட அபிவிருத்தி குழுதலைவர் பா.உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.No comments: