காரைதீவில் துப்பாக்கிச்சூடு சந்தேக நபர்கள் தப்பியோட்டம்

 (எஸ்.அஷ்ரப்கான் -  )




சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காரைதீவு பிரதான வீதியில் வெட்டுவாய்க்காலுக்கு அருகில்  துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

2022.01.31 இரவு 11.00 மணி அளவில்  அக்கரைப்பற்றில் இருந்து கல்முனை நோக்கி கார் ஒன்றில் குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்ட நபர்கள் பயணித்துக்கொண்டிருந்த போது அதனை அறிந்து அவர்களை கைது செய்யும் பொருட்டு பொலிசார் பின் தொடர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் மோட்டார் சைக்கிளில்  பின் தொடர்ந்த ஆயுததாரிகள் மேற்கொண்ட துப்பாக்கி சுட்டில், குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்டோர் பயணித்ததாக கருதப்படும் கார் இலக்காகி உள்ளதுடன்,   சம்பந்தப்பட்ட நபர்களும் அவ்விடத்தில் வாகனத்தை கைவிட்டு விட்டு தப்பிச் சென்று தலைமறைவாகி உள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர் அவ்விடத்தைச் சுற்றி வளைத்துள்ளதுடன் தேடுதல் நடவடிக்கையையும் முன்னெடுத்துள்ளனர்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இது விடயமான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: