மட்டு நகருக்கு மான் இறைச்சியை எடுத்துச் சென்ற இளைஞர்கள் கைது

(கனகராசா சரவணன்)


மட்டக்களப்பு ஆயித்தியமலை பிரதேசத்தில் இருந்து மட்டக்களப்பு நகருக்கு வியாபாரத்துக்காக 8 கிலோ மான் இறைச்சியை  முச்சக்கரவண்டி ஒன்றில்  எடுத்துச் சென்ற இருவரை வவுணதீவு பிரதேசத்தில் வைத்து நேற்று சனிக்கிழமை (22) இரவு கைது செய்துள்ளதாக வவுணதிவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிசந்த அப்புகாமி தெரிவித்தார்.


விசேட புலனாய்வு பிரிவினுருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான நேற்று மாலை 6 மணியளவில் வவுணதீவு பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிசார் ஆயித்தியமலை வவுணதீவு வீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இதன் போது மட்டக்களப்பு நகரை நோக்கி பிரயாணித்த முச்சக்கரவண்டியை நிறுத்தி சோதனையிட்டபோது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 8 கிலோ மான் இறைச்சியுடன் இருவரை கைது செய்ததுடன் முச்சக்கரவண்டி ஒன்றை மீட்டுள்ளனர். 

இதில் கைது செய்யப்பட்டவர்கள் வவுணதீவு பிரதேசத்தைச் சேர்ந்த 26, 24 வயதுடையவர்கள் எனவும் ஆயித்தியமலை பிரதேசத்தில் இறைச்சியை வாங்கி மட்டக்களப்பு நகரில் விற்பனை செய்துவருவதாகவும் பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுடன் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். 

No comments: