பலத்த மழைக் காரணமாக மண் மேடு சரிந்து விழுந்து ஐவர் காயம்(க.கிஷாந்தன்)

நேற்றிரவு (13.05.2021) கினிகத்தேனை பகுதியில் பெய்த பலத்த மழைக் காரணமாக பொல்பிட்டிய மாதெனியாவத்த பகுதியில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

இதனால் அங்குள்ள வீடொன்றின் மீது மண் மேடு சரிந்து விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனால் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த தாய் மற்றும் அவரது மகள் உட்பட ஐவர் காயமடைந்துள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர். இன்று அதிகாலை 12.30 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மண்ணுக்குள் புதையுண்டவர்களை பிரதேச மக்களும், லக்ஸ்ஸபான இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவத்தினரும் மீட்டுள்ளனர்.

இதன்போது பலத்த காயமடைந்த மகளும், தாயும் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பத்தில் வீட்டின் படுக்கையறை பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.

இதேவேளை, மத்திய மலை நாட்டின் சில பிரதேசங்களில் நேற்று (13) மாலை முதல் தொடர்ச்சியாக கன மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக நோர்ட்டன் பீரிஜ், விமலசுரேந்திரா நீர்தேக்கத்தின் ஒரு வான் கதவு திறக்கப்பட்டுள்ளது.

அதேபோல் தொடர்ந்தும் மழை பெய்யுமானால் நீர்தேக்கத்தின் ஏனைய வான்கதவுகளும் திறக்கப்படும் என நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளளளது.

மேலும் லக்ஸப்பான நீர்தேக்கத்தை அண்டிய பகுதிகளில் கன மழை பெய்து வருவதாகவும் மழை நீடித்தால் அந்த நீர் தேக்கத்தின் வான் கதவுகளும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளளது.

இதேவேளை, தொடர்ந்தும் மழை பெய்தால் மலைப்பாங்கான பகுதிகளில் மண் சரிவு ஏற்படகூடும் என நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Post a Comment

0 Comments