6-வது முறையாக முதல்வர் அரியணை ஏறும் திமுக


2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் மக்களின் தீர்ப்பு தி.மு.க. ஆட்சியமைப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இதன் மூலம் 6 ஆவது முறையாக தமிழகத்தின் ஆட்சியதிகாரத்தை தி.மு.க. கைப்பற்றியுள்ளது.

கட்சி தொடங்கி எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் 1957-ஆம் ஆண்டு தேர்தல் களத்தில் நுழைந்த திராவிட முன்னேற்றக் கழகம் அடுத்த பத்தாண்டுகளில் 1967-ஆம் ஆண்டு 137 இடங்களில் வென்று ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியது. தொடர்ந்து 1971 ஆம் ஆண்டு 184 தொகுதிகளில் வென்று இரண்டாவது முறையாக ஆட்சியமைத்தது. அதன் பின்னர் 1977 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க.விடம் ஆட்சியதிகாரத்தை பறிகொடுத்தது தி.மு.க.

தொடர்ந்து 3 சட்டப்பேரவை தேர்தல்களில் தோல்வியைத் தழுவிய அந்தக் கட்சி, முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின்னர் 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் 150 இடங்களில் வென்று ஆட்சியமைத்தது. 

தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டு, 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் இரு இடங்களை மட்டுமே பெற்ற போதும், 1996 ஆம் ஆண்டு 176 இடங்களைக் கைப்பற்றி வென்றது. 2001 ஆம் ஆண்டு அ.தி.மு.க.விடம் ஆட்சியை இழந்த தி.மு.க. 2006 ஆம் ஆண்டு தனிப் பெரும்பான்மையின்றி ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. 

இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி 163 இடங்களைப் பெற்ற போதும், தி.மு.க. 96 இடங்களை மட்டுமே பெற்றது. இதனால் கூட்டணிக் கட்சியான காங்கிரசின் ஆதரவுடன் 5 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்தது.

அதன் பின்னர் கடந்த இரு சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் ஆட்சியதிகாரத்தைப் பெற இயலாமல் போன தி.மு.க. தற்போது தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் வல்லமையைப் பெற்றுள்ளது.

No comments: