சிம்ம ராசி - பிலவ வருட தமிழ் புத்தாண்டு பலன்கள்


தலைமைப் பண்பும் தைரிய மனமும் கொண்ட சிம்மராசிக்காரர்களே, எப்போதும் நீங்கள் பிறர்நலனையும் சேர்த்தே யோசிப்பவர்கள். அப்படிப்பட்ட உங்களுக்கு இந்தப் பிலவத் தமிழ்ப்புத்தாண்டு பலன்கள் எப்படி அமையப்போகின்றன என்பதைப் பார்ப்போம்.

பொது 

ராசிக்கு 9 - ம் வீட்டில் புத்தாண்டு பிறப்பதால் உயர்வு அடைவீர்கள். இதுவரை முடிக்காமல் விட்ட பல வேலைகளை முடிப்பீர்கள். சுறுசுறுப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி அன்பும் அந்நியோன்யமும் அதிகரிக்கும். தன்னம்பிக்கை மேலோங்கும். பிள்ளைகளிடம் அன்பு செலுத்துவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். பையனுக்கு வேலை கிடைக்கும். வெளிநாட்டு வாய்ப்புகளும் தேடி வரும்.

உங்கள் மகன் அல்லது மகளுக்கு எதிர்பார்த்தபடி நல்ல வரன் அமையும். சித்திரை, வைகாசி ஆவணி மாதங்களில் நினைத்தபடி திருமணத்தை முடிப்பீர்கள். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் மன நிம்மதி உண்டு. சொந்த - பந்தங்கள் வலிய வந்து உறவாடுவார்கள். 

சகோதர உறவுகளில் இருந்த மனக் கசப்பு நீங்கும். முழுமையாக அவர்கள் புரிந்து கொள்வர். அரசியல் மற்றும் ஆன்மிகவாதிகளின் நட்பு கிடைக்கும். வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். நீண்ட நாள்களாகத் தடைப் பட்டுக்கொண்டிருந்த குலதெய்வக் கோயில் பயணத்தை மேற்கொள்வீர்கள். அக்கம்பக்கத்தாருடன் சுமுகமான நட்புறவாடுவீர்கள்.

பொருளாதாரம் 

வருமானம் அதிகரிக்கும். சேமிக்கவும் தொடங்குவீர்கள். பழைய கடன்களைக் கொஞ்சம் கொஞ்சமாக திருப்பிச் செலுத்தி முடிப்பிர்கள். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. பூர்வீகச் சொத்திலிருந்த வில்லங்கம் விலகும். சொந்த வீடு கட்டும் முயற்சிகளில் வெற்றிகிடைக்கும். வங்கிக் கடனுதவியும் கிடைக்கும். பால்ய நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அடகிலிருந்த நகைகளை மீட்பீர்கள்.

குருபகவானின் பலன்கள்

இந்தப் புத்தாண்டின் தொடக்கம் முதல் 13.9.2021 வரை மற்றும் 13.11.2021 முதல் வருடம் முடியும்வரை குருபகவான் 7 - ம் வீட்டில் நுழைவதால் பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வீர்கள். மறைவாக இருந்த நீங்கள்,பல விசேஷங்களில் முன்வரிசையில் காணப்படுவீர்கள். பணத்தட்டுபாடு குறையும். அரசுப் பதவி கிடைக்கும். வீடு வாங்குவீர்கள். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். வழக்குகளில் வெற்றியுண்டு. அரைகுறையாக நின்றுபோன கட்டட வேலைகளையும் முடிப்பீர்கள்.

ஆனால் 14.9.2021 முதல் 12.11.2021 வரை குரு 6 - ல் நின்று டென்ஷன், பணப்பற்றாக்குறை, விபத்து, குடும்பத்தில் பிரிவு என அலைக்கழிப்பார்

சனிபகவானின் பலன்கள்

சனி 6 - ம் வீட்டிலேயே தொடர்வதால் பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். எதிர்பாராத வகையில் பணவரவு உண்டு. தாழ்வுமனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். பிள்ளைகளால் இருந்து வந்த பிரச்னைகள் நீங்கும். இழுபறியாக இருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். சொந்த ஊரில் மதிப்பு, மரியாதைக் கூடும். எதையோ இழந்ததைப் போல இருந்த நிலை மாறி முகம் மலரும். உற்சாகம் பிறக்கும்.

ராகு - கேது பகவானின் பலன்கள்

20.3.2022 வரை ராசிக்கு 10 - ல் ராகு நிற்பதால் வேலைச்சுமை, டென்ஷன் வரக்கூடும். கேது 4 - ல் நிற்பதால் தாழ்வுமனப்பான்மை, பகைமை வரும். தாயாரின் உடல்நிலை பாதிக்கும். 21.3.2022 முதல் 9 -ல் ராகு நுழைவதால் பணவரவு திருப்திகரமாக இருக்கும். ஆனால் தந்தைக்கு மருத்துவச் செலவு, மனஸ்தாபங்கள் வந்துபோகும். கேது 3 - ம் வீட்டில் நுழைவதால் பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்னைகள் சுமுகமாக முடியும். வேற்று மொழி பேசுபவர்களால் ஆதாயமடைவீர்கள்.

வியாபாரம்  

புதுத் திட்டங்களை அறிமுகப்படுத்தி, போட்டிகளை முறியடிப்பீர்கள். தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். உணவு, மருந்து, மின்னணு வகைகளால் லாபம் அதிகரிக்கும். வாடிக்கையாளரின் வருகையை அதிகப்படுத்தக் கடையை விரிவுபடுத்துவீர்கள். அழகுபடுத்துவீர்கள். நழுவிப் போன ஒப்பந்தங்கள் தேடி வரும். கூட்டுத் தொழிலிலிருந்து வந்த கூச்சல் - குழப்பங்கள் நீங்கும். பங்குதாரர்கள் இனி அரவணைத்துச் செல்வார்கள். அயல்நாட்டுத் தொடர்புடன் அதிக லாபம் சம்பாதிப்பீர்கள்.

உத்தியோகம்  

தொல்லை கொடுத்த மூத்த அதிகாரி உங்கள் அறிவுத் திறனைக் கண்டு ஆச்சர்யப்படுவார். சக ஊழியர்களின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். கணினித் துறையிலிருப்பவர்களுக்குப் புது வாய்ப்புகள் தேடி வரும். கலைத்துறையினர் பரபரப்புடன் காணப்படுவீர்கள். நீண்ட நாள் கனவு நனவாகும். அரசு, பாராட்டி கௌரவிக்கும்.

இந்தப் புத்தாண்டு உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகளைத் தருவதாகவும், பணம், வசதி, வாய்ப்புகளை அதிகப்படுத்துவதாகவும் அமையும்.

Post a Comment

0 Comments