தனுசு ராசி - பிலவ வருட தமிழ் புத்தாண்டு பலன்கள்


கலகலப்பாகப் பேசி மற்றவர்களின் மனதில் இடம்பிடிப்பதோடு தாராள மனசுடன் எல்லோருக்கும் உதவும் இயல்பு கொண்ட  தனுசு ராசிக்காரர்களே... உங்களுக்கு இந்தப் பிலவப் புத்தாண்டு எத்தகைய பலன்களைத் தரும் என்று பார்ப்போம்.

பொது 

ராசிக்கு 5 - ல் புத்தாண்டு பிறப்பதால் எல்லாவற்றிலும் வெற்றி பெறுவீர்கள். மன உளைச்சல், காரியத் தடைகள், வாக்குவாதங்கள் எல்லாம் இனி நீங்கும். குடும்பத்தில் கலகலப்பாக சூழல்நிலை உருவாகும். திறமைகள் வெளிப்படும். கணவன் - மனைவிக்கு இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். முன்கோபம், வறட்டுப் பிடிவாதம் விலகும்.

செலவுகளைக் குறைப்பீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்குவரும். பிள்ளைகளிடம் அன்பு செலுத்துவீர்கள். வைகாசி, ஆனி மாதங்களில் வீட்டில் சுப காரியங்கள் ஏற்பாடாகும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். ஆடி மாதத்தில் உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். மருத்துவச் செலவுகள் வந்து போகும். வாகனத்தை இயக்கும்போது கவனத்தை சிதறவிடாதீர்கள். சிறுசிறு விபத்துகள் நிகழலாம்.

பிரபலங்களின் நட்புக் கிடைக்கும். வசதி - வாய்ப்புகள் அதிகரிக்கும். என்றாலும் சகோதர வகையில் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. மன உளைச்சல் வந்து போகும். பூர்வீகச் சொத்து விவகாரங்களில் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செயல்பட வேண்டாம். உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். வழக்குகளில் நல்ல முன்னேற்றமும் எதிர்பார்த்த தீர்ப்பும் கிடைக்கும்.

குருபகவான் அருளும் பலன்கள்

14.4.21 முதல் 13.9.2021 வரை மற்றும் 13.11.2021 முதல் வருடம் முடியும் வரை குரு 2 - ல் தொடர்வதால் குடும்பத்தில் அமைதியான சூழ்நிலையே நிலவும். ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகம் கூடிவரும். வழக்குகள் சாதகமாக முடியும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். மகனுக்கு உயர்கல்வி, உத்தியோகம் நல்ல விதத்தில் முடியும். மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள்.

நின்றுபோன வீடு கட்டும் பணியைத் தொடங்க கடன் உதவிகள் கிடைக்கும். பேச்சில் ஒரு தெளிவு பிறக்கும். பழைய கடன்களை அடைப்பீர்கள். ஆனால் 14.9.2021 முதல் 12.11.2021 வரை 3 - ல் குரு மறைவதால் சில காரியங்களை இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும். உங்கள் இயல்புக்கு மாறான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம். உணர்ச்சி வசப்படாமல் இருப்பது நல்லது.

ராகு - கேது தரும் பலன்கள்

14.4.21 முதல் 20.3.2022 வரை கேதுபகவான் 12 - லும் ராகு 6 - லும் நிற்பதால் வீட்டில் நிற்பதால் திடீர் பயணங்கள் அதிகரிக்கும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வழக்கில் வெற்றியுண்டு. வெளிநாட்டிலிருப்பவர்கள் உதவுவார்கள். 21.3.2022 முதல் வருடம் முடியும்வரை கேது லாப வீட்டிற்குள் வருவதால் ஷேர் மூலம் பணம் வரும். திடீர் யோகம் உண்டு. சகோதர உறவுகள் பாசமாக நடந்துகொள்வார்கள்.

பரம்பரைச் சொத்துகளைப் பங்கிடுவதில் இருந்த பிரச்னைகள் சரியாகும். ராகு 5 -ம் வீட்டிற்குள் வருவதால் பிள்ளைகளால் வீண் அலைச்சலும், மன உளைச்சலும் வரக்கூடும். அவர்களின் நட்பு வட்டத்தைக் கண்காணியுங்கள். சொந்த பந்தங்களுடன் மோதல் போக்கு ஏற்படும். குடியிருக்கும் வீட்டை மாற்ற வேண்டி வரும்.

சனிபகவான் தரும் பலன்கள்

சனி 2 - ல் அமர்ந்து ஏழரைச்சனியின் ஒருபகுதியான பாதச்சனியாகத் தொடர்வதால் அவ்வப்போது வீண் வாக்குவாதங்கள் தலைதூக்கும். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப்பிடிப்பது நல்லது. கர்ப்பிணிகள் கவனமாகச் செயல்படுங்கள். 

கண், காது வலி வந்து செல்லும். பல் ஈறு வலிக்கும். பூர்வீக சொத்துப் பிரச்னையை அறிவுப்பூர்வமாக அணுகுவது நல்லது. சனிக்கிழமைகளில் ஆலயங்களுக்குச் சென்று நல்லெண்ணெய் விளக்கேற்றி வணங்கிவந்தால் நற்பலன்கள் அதிகரிக்கும்.

வியாபாரம் 

புது முதலீடுகள் ஒப்பந்தங்கள் செய்வீர்கள். போட்டிகள் குறையும். பங்குதாரர்களிடையே ஒற்றுமை அதிகரிக்கும். புதுநபர்களின் சந்திப்பு நிகழும். பழைய பாக்கிகளை வசூலிப்பீர்கள். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரி பாக்கிகளை முறையாகச் செலுத்துவீர்கள். வாடிக்கையாளர் அதிகரிப்பார்கள். கடையை விரிவுப்படுத்துவீர்கள். அனுபவம் மிகுந்த வேலையாட்கள் வந்து சேருவார்கள்.

உத்தியோகம் 

புதிய உற்சாகம் பிறக்கும். அலுவலகத்தில் உங்களுக்கு எதிராகச் செயல்பட்டவர்கள் தேடிவந்து மன்னிப்பு கேட்பார்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். 

சம்பளப் பிரச்னை தீரும். உங்கள் ஆலோசனைக்கு புதிய மதிப்பு உண்டாகும். தனியார் துறையில் பணி புரிபவர்களுக்கு அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனத்தில் இருந்து புது வாய்ப்புகள் தேடி வரும். கலைஞர்களுக்கு மிகப் பெரிய வாய்ப்புகள் தேடி வரும். கிசுகிசுத் தொல்லைகள் விலகும். ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். புது நட்பு கிடைக்கும்.

இந்தப் பிலவ வருடம் அரை குறையாக இருந்த வேலைகளை முடிக்க வைத்து, பொருளாதார வளர்ச்சியையும், குடும்பத்தில் மலர்ச்சியையும் தருவதாக அமையும்.

Post a Comment

0 Comments