கடக ராசி - பிலவ வருட தமிழ் புத்தாண்டு பலன்கள்


எடுத்த காரியத்தில் வெற்றி பெறும்வரை ஓயாமல் உழைக்கக்கூடிய கடக ராசி அன்பர்களுக்கு மூடி மறைத்துப் பேசுவது உங்களுக்குப் பிடிக்காது, நண்பர்களை அதிகம் நேசிக்கும் உங்களுக்கு பிலவ தமிழ்ப்புத்தாண்டு பலன்கள் எப்படி அமைகின்றன என்பதைப் பார்ப்போம்

பொது : புத்தாண்டு உங்களுக்கு 10 வது ராசியில் பிறப்பதால் சவாலான காரியங்களை சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் எப்போதும் ஏதேனும் ஒரு சிக்கல் எழும்பியதே, அந்த நிலை மாறும். 

கணவன் - மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். பணவரவு திருப்தி தரும். பிள்ளைகள் மதிப்புடன் நடந்துகொள்வர். அவர்களின் ஆசைகளைப் பூர்த்தி செய்வீர்கள். மகன் அல்லது மகளுக்கு சித்திரை, வைகாசி மாதங்களில் கல்யாணம் நடத்தும் வாய்ப்பு தேடிவரும்.

வாழ்க்கைத் துணையின் உறவுகளால் ஏற்பட்ட கலகம், செலவுகள் விலகும். வெளியூர்ப் பயணங்கள் திருப்தி தரும். தாயுடன் இருந்த மனக் கசப்புகள் விலகும். அவரின் உடல்நிலை சீராகும். 

உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். தள்ளிப் போன குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அக்கம்பக்கத்தாருடனான மனக் கசப்பு நீங்கும். எதிர்த்தவர்கள் அடங்குவர்.

பொருளாதாரம் 

வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். சொத்துப் பிரச்னைகள் தீரும். பழைய வீட்டுக்கு பதிலாக புதிய வீடு வாங்குவீர்கள். வெளிநாட்டுப் பயணம் தேடி வரும். சிந்தித்துச் செயல்படுவீர்கள். கனவுத் தொல்லை, தூக்கம் இன்மை விலகும். அரசு காரியங்களில் அனுகூலம் காணப்படும். 

எதிர்காலத்தை மனதில் கொண்ட சில காரியங்களை முடிப்பீர்கள். அரைகுறையாக நின்ற கட்டட வேலைகள் புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் முழுமையடையும். சொந்த ஊரில் மதிப்பு மரியாதை கூடும். வசதி வாய்ப்புகள் பெருகும்.

குருபகவான் அருளும் பலன்கள்

14.4.21 முதல் 13.9.2021 வரை மற்றும் 13.11.2021 முதல் வருடம் முடியும்வரை குருபகவான் அஷ்டம ஸ்தானத்தில் அமர்வதால் அரசு விவகாரங்கள், வழக்குகளில் அலட்சியப் போக்கு கூடாது. சதிகளில் சிக்க நேரிடும். உணர்ச்சி வசப்பட்டு தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம். அறிவுப் பூர்வமாக முடிவெடுங்கள். 14.9.2021 முதல் 12.11.2021 வரை குரு 7ல் நிற்பதால் குடும்பத்தில் நல்லது நடக்கும்.

கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். எதிர்பார்த்த வகைகளில் பணம் வரும். பழைய கடனைக் கொஞ்சம் கொஞ்சமாக பைசல் செய்வீர்கள். வெளியூர் பயணங்கள் திருப்திகரமாக அமையும்.

ராகு - கேது தரும் பலன்கள்

20.3.2022 வரை லாபவீட்டில் ராகு நிற்பதால் எதிலும் மகிழ்ச்சி பொங்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். எதிர்பார்த்த பண வரவு உண்டு. வெளிவட்டாரத்தில் புகழ் கூடும். பொது நிகழ்ச்சிகள், கல்யாண, கிரகப் பிரவேச வைபவங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

கேது 5-ல் நிற்பதால் பிள்ளைகளுடன் மனவருத்தங்கள் வந்து நீங்கும். 21.3.2022 முதல் 10-ல் ராகு நுழைவதால் அடுத்தடுத்து வேலைச்சுமை இருக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டு. கேது 4-ல் நுழைவதால் புது முயற்சிகள் தடைப்பட்டு வெற்றியடையும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவு அதிகரிக்கும். வீட்டுப் பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும்.

சனிபகவான் தரும் பலன்கள்

இந்த ஆண்டு முழுக்க கண்டகச் சனியாக அமர்வதால் பயணத்தின் போது கவனம் தேவை. ஏமாற்றங்கள், பணயிழப்புகள் வந்து போகும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். கர்ப்பிணிகள் கவனமாக இருக்க வேண்டும். பிள்ளைகளால் கொஞ்சம் அலைச்சலும், செலவுகளும் இருக்கும்.

வியாபாரம் 

தேக்க நிலை விலகும். அதிரடியான செயல்பாடுகளில் இறங்குவீர்கள். போட்டியாளர்கள் பின்வாங்குவர். உங்களது தொழில் ரகசியங்களை வெளியிட்ட வேலையாட்களைக் கண்டறிந்து விலக்குவீர்கள். அனுபவம் மிகுந்தவர்களைப் பணியில் நியமிப்பீர்கள்.

மார்கழி, தை, பங்குனி மாதங்களில் இரட்டிப்பு லாபம் பெறுவீர்கள். பங்குதாரர்களின் ஒத்துழைப்பு உண்டு. வரி பாக்கிகளை முறையாகச் செலுத்துங்கள்.

உத்தியோகம் 

திறமை வெளிப்படும். மேலதிகாரியின் கவனம் உங்கள் மேல்படும். வருடத்தின் மத்தியப் பகுதியில் சம்பள உயர்வு, பதவி உயர்வு ஆகியன உண்டு. சக ஊழியர்கள் இனி உங்களை மதிப்பார்கள். வெளிநாட்டு நிறுவனங்களிலிருந்து புதிய வாய்ப்புகள் தேடி வரும். கலைத்துறையினருக்குப் புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

எதிர்பாராத திடீர்த் திருப்பங்களோடு அதிரடி முன்னேற்றங்களையும் தருவதாக இந்தப் பிலவ வருடப் புத்தாண்டு அமையும்.

Post a Comment

0 Comments