சீரான பஸ் போக்குவரத்தை அரசாங்கம் வழங்க வேண்டும் என கோரி நுவரெலியாவில் போராட்டம்

க.கிஷாந்தன்


நுவரெலியா - இராகலை புரூக்சைட் சந்தியிலிருந்து கோணப்பிட்டி வழியாக குட்வூட் வரை, சீரான பஸ் போக்குவரத்தை அரசாங்கம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, புரூக்சைட் சந்தியில், இன்று (21) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

வலப்பனை மற்றும் ஹங்குராங்கெத்த கோட்ட கல்வி வலயத்துக்கு உட்பட்ட 15 பாடசாலைகளில் பணியாற்றும் 60க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், இந்தக் கவனஈர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சில்வர்கண்டி, மாகுடுகலை, ஹய்பொரஸ்ட் (மூன்று பிரிவுகள்), ரில்லாமுல்ல, அல்மா, பாரதி, மெரிகோல்ட், கோணக்கலை, கோணப்பிட்டிய, குட்வூட், எலமுல்ல, கபரகலை ஆகிய பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர் சமூகத்தினரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேற்குறித்த 15க்கும் மேற்பட்ட பாடசாலைகளில் சில்வர்கண்டி பாடசாலையைத் தவிர்ந்த ஏனைய 14 பாடசாலைகளுக்கும் செல்ல புரூக்சைட்  சந்தியிலிருந்து  நான்கு கிலோமீற்றர் தொடக்கம் 30 கிலோமீற்றர் வரை பஸ் பயணத்தை இந்த ஆசிரியர் சமூகத்தினர் தினமும் மேற்கொள்கின்றனர்.

இப்பாடசாலைகளில் சுமார் 4,800 மாணவர்கள் கல்வி கற்கும் நிலையில் அவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு இந்த 60க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பொறுப்பாளிகளாகக் காணப்படுகின்றனர்.

இவர்கள் அனைவரும் நுவரெலியா, ஊவா மாகாணம், வலப்பனை ஆகிய பகுதிகளிலிருந்தே புரூக்சைட்  சந்திக்கு காலை 6.45 மணியளவில் வருகை தந்து அங்கிருந்தே 4-30 கிலோமீற்றர் தூரங்களில் உள்ள பாடசாலைகளுக்கு தினமும் செல்ல வேண்டியுள்ளது.

இராகலை நகரில் இருந்து கோனப்பிட்டிய வழியாக குட்வூட் பகுதிக்கு காலை 6.30 மணிக்குப் புறப்படும் நுவரெலியா டிப்போவுக்குறிய அரசாங்க பஸ்சேவையை நம்பியே இவர்கள் பயணிக்கின்றனர். இந்நிலையில்  ஏழு வருடங்களாக சேவையில் ஈடுபடுத்தப்படும் இந்த பஸ்.

கடந்த சில மாதங்களாக சேவையில் ஈடுபடுவதற்கு தடையேற்பட்டுள்ளதால், போக்குவரத்து சிக்கலுக்கு தாம் முகம்கொடுத்து வருவதாகவும் இதனைக் கருத்திற்கொண்டே தாம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments: