மீளவும் மூடப்படுகின்றதா ? இந்தியா ? அசூர வேகத்தில் மீண்டும் கொரோனா பரவல் !..

இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,73,810 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,50,61,919 ஆக அதிகரித்துள்ளது. 

அதேபோல், தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 1,619 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,78,769 ஆக உயர்ந்துள்ளது.

குறிப்பாக தலைநகர் டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,000 தாண்டி விட்டது. டெல்லியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு அமலில் இருந்து வந்தது.

டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு, டெல்லியில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களின் அனைத்து நீதிபதிகளும் அந்தந்த 
நீதிமன்றங்களின் அவசர வழக்குகளை மட்டுமே வீடியோ கான்பரன்சிங் முறை மூலம் எடுக்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த சூழலில் கொரோனா பாதிப்புகள் தொடர்பாக டெல்லி அரசு அதிரடி முடிவுகளை எடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் அது குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என்றும் ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் டெல்லியில் ஒரு வாரத்திற்கு (இன்று இரவு முதல் வரும் 26-ம் தேதி வரை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 

மேலும் டெல்லியின் சுகாதார அமைப்பு அதன் எல்லையை நெருங்கியது. இந்த அமைப்பு முற்றிலுமாக சரிந்துவிட்டது என்று நான் கூறவில்லை, ஆனால் அது அதன் எல்லையை எட்டியுள்ளது" என்று கெஜ்ரிவால் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.

இதனைத்தொடர்ந்து அத்தியாவசிய காரணங்கள் இன்றி பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டெல்லி அரசு எச்சரித்துள்ளது.

No comments: