'கர்ணன்' திரைப்படம் திட்டமிட்டபடி நாளை வெளியாகும் - தயாரிப்பாளர் தாணு


தனுஷ் நடித்துள்ள 'கர்ணன்' திரைப்படம் திட்டமிட்டபடி நாளை (வெள்ளிக்கிழமை) வெளியாகும் என்று தயாரிப்பாளர் 'கலைப்புலி' எஸ். தாணு தெரிவித்துள்ளார். 

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள படம் 'கர்ணன்'. இந்தப் படம் ஏப்ரல் 9ம் தேதி வெளியாகும் என்று தயாரிப்பாளர் தாணு ஒரு மாதத்திற்கு முன்பே அறிவித்தார். 

மேலும், படம் நாளை வெளியாகும் நிலையில், திரையரங்கு ஒப்பந்தங்கள்  முடிவடைந்து முன்பதிவும் தொடங்கிவிட்டன. குறிப்பாக, சென்னையில் மூன்று நாட்களுக்கான முன்பதிவு பெருமளவு முடிந்துவிட்டது என கூறப்படுகிறது. 

இந்த நிலையில், தமிழக அரசு மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதிலும் திரையரங்குகள் 50 சதவீத பார்வையாளர்களுடன் மட்டுமே இயங்க வேண்டும் என்று கூறியுள்ளது. இதனால் 'கர்ணன்' திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகுமா என்ற கேள்வி எழுந்தது. 

ஆனால், "அறுதியிட்டு உறுதி கூறுகிறேன், எண்ணியதை எண்ணியபடி, சொல்லியது சொல்லியபடி நல்லது நடந்தே தீரும், 'கர்ணன்' எல்லோர் மனதையும் கவர்வான்" என அப்படத்தின் தயாரிப்பாளர் 'கலைப்புலி' எஸ்.தாணு கூறியுள்ளார். மேலும், அரசின் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு நடப்பவன், வெல்வான் 'கர்ணன்' எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


Post a Comment

0 Comments