‘கர்ணன்’ திரைப்படம் முதல் இரண்டு நாட்களில் நல்ல வசூல்!


தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘கர்ணன்’ திரைப்படம் முதல் இரண்டு நாள்களில் நல்ல வசூலை ஈட்டியுள்ளது. 

கொரோனா பரவல் காரணமாக, திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என அரசு அறிவித்த நிலையில், 'கர்ணன்' படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்படுமா என சந்தேகம் எழுந்தது.

ஆனால், 'கர்ணன்' திரைப்படம் சொன்னபடி ஏப்ரல் 9ம் திகதி வெளியாகும் என அந்தப்படத்தின் தயாரிப்பாளர் தாணு தெரிவித்த நிலையில், படம் அன்றைய தினமே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது.

இந்த நிலையில் தற்போது 'கர்ணன்' திரைப்படத்தின் இரண்டு நாள் வசூல் விவரங்கள் தெரியவந்துள்ளது. 'கர்ணன்' படத்திற்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பு நிலவியதால் அனைத்து திரையரங்குகளிலும் அதிகாலை காட்சிகளில் திரையிடப்பட்டன. அதன் காரணமாக தமிழகத்தில் அன்றைய தினம் 'கர்ணன்' திரைப்படம் ரூ.10 கோடி வசூல் செய்தது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்றைய தினம் அரசு அறிவித்த கொரோனா கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்த நிலையில், வசூல் சற்று சரியத் தொடங்கியது. இருப்பினும் தமிழக அரசு கூடுதலாக காட்சிகளை திரையிட்டுக் கொள்ள அனுமதியளித்தது. இரண்டாம் நாளான நேற்று சென்னையில் மட்டும் கர்ணன் திரைப்படம் ரூ.51 லட்சம் வசூல் செய்துள்ளது. மொத்தமாக சென்னையில் மட்டும் கடந்த இரண்டு நாள்களில் 'கர்ணன்' படத்தின் வசூல் ரூ.1.43 கோடி. 

வெளிநாடுகளைப் பொறுத்தவரை, கடந்த இரண்டு நாள்களில் ஆஸ்திரேலியாவில் ரூ.45.25 லட்சமும், நியூசிலாந்தில் ரூ.5.94 லட்சமும், சிங்கப்பூரில் ரூ.50.63 லட்சத்தையும் 'கர்ணன்' படம் வசுலித்துள்ளது. இந்த விவரங்களை திரைப்பட வர்த்தக ஆய்வாளர் தரன் ஆதர்ஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

No comments: