சிறந்த நகைச்சுவை நடிகராக தமிழக அரசின் விருது 5 முறை, ஃபிலிம்பேர் விருது 3 முறை: நகைச்சுவையில் முத்திரை பதித்த விவேக்!


சிரிப்பும் சிந்தனையும் கலந்த நகைச்சுவையை திரையில் பரப்பி சின்னக் கலைவாணர் என கொண்டாடப்பட்டவர் நடிகர் விவேக். திடீரென ஏற்பட்ட அவரது மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 1961-ல் பிறந்தவர் நடிகர் விவேக். சென்னைக்கு வந்து தலைமைச் செயலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த நேரத்தில்தான், Madras Humour club-ல் அவர் செய்த காமெடி நிகக்ழ்ச்சிகளுக்கு வரவேற்பு கிடைக்கத் தொடங்கியது. அதன் வழியான தொடர்புகளே, இயக்குநர் சிகரம் பாலச்சந்தரின் அறிமுகத்தையும் பெற்றுத்தர பின்னர் அவருடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினார் விவேக். 

அதன்பிறகு அவருக்கு 1987-ல் மனதில் உறுதி வேண்டும் படத்தில் நடிக்கவும் வாய்ப்புக் கொடுத்தார் பாலச்சந்தர். அதன்பிறகு சிறுசிறு வேடங்களில் நடித்து வந்த விவேக், உழைப்பாளி, வீரா போன்ற படங்களால் ரசிகர்களுக்கு பரிச்சயமான நடிகராகவும் ஆனார்.

ஒரு நடிகராக விவேக்கிற்கு தனி அடையாளத்தைக் கொடுத்த திரைப்படம் 'காதல் மன்னன்'. அதன்பிறகு, அவர் நடித்த படங்களுக்கு கிடைத்த வரவேற்பால், அடுத்தடுத்து நடிக்கும் வாய்ப்புகள் வரத் தொடங்கின.

அதனால், 2000 மற்றும் 2001-ம் ஆண்டுகளில் மட்டுமே சுமார் 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் விவேக். அஜித் உடன் வாலி, விஜய் உடன் குஷி என முன்னணி நடிகர்களின் படங்களின் வரத் தொடங்கிய விவேக், தன் காமெடியில் கருத்தையும் முன்வைக்கத் தொடங்கினார். அதற்கு ரசிகர்களிடத்தில் கிடைத்த வரவேற்பே, சின்னக் கலைவாணர் என அவர் அழைக்கப்படவும் காரணமானது.

அந்நியன், சிவாஜி என தமிழ் சினிமாவின் பிரமாண்ட படைப்புகளிலும் காமெடியனாக கலக்கிய விவேக்கின் திரை வாழ்க்கையில் 'படிக்காதவன்' திரைப்படம் மைல்கல்லாக அமைந்தது. இந்தப் படத்தில் Don-ஆக வரும் அவரது காமெடி எப்போது பார்த்தாலும் எல்லோரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்.

காமெடி நடிகராக மட்டும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் விவேக் முத்திரை பதித்திருக்கிறார். அதேபோல், கதையின் நாயகனாகவும் வெள்ளைப் பூக்கள் உள்ளிட்ட படங்களில் விவேக்கின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டிருக்கிறது.

திரைத்துறையின் விவேக்கின் பங்களிப்பை போற்றும் வகையில், 2009ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 2006-ல் தமிழக அரசின் கலைவாணர் விருதும் வழங்கப்பட்டிருக்கிறது. அத்தோடு, சிறந்த நகைச்சுவை நடிகராக தமிழக அரசின் விருதை 5 முறையும், ஃபிலிம்பேர் விருதை 3 முறையும் பெற்றிருக்கிறார் விவேக்.

No comments: