ஐபிஎல் 2021 - இன்று இரண்டு ஆட்டங்கள்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடக்கிறது.
14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் தற்போது சென்னை மற்றும் மும்பையில் நடந்து வருகிறது. இதில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் அரங்கேறுகின்றன.
இன்று மாலை 3.30 மணிக்கு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடக்கும் 19 -லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது. இந்த சீசனில் மும்பையில் நடக்கும் கடைசி போட்டி இதுவாகும்.
தொடக்க ஆட்டத்தில் டெல்லியிடம் படுதோல்வி அடைந்த சென்னை அணி அடுத்தடுத்த ஆட்டங்களில் பஞ்சாப், ராஜஸ்தான், கொல்கத்தாவை வரிசையாக வீழ்த்தியது.
கடந்த ஆண்டு தனது முதல் 4 ஆட்டங்களில் ஒன்றில் வெற்றியும் 3ல் தோல்வியும் கண்ட சென்னை அணி இந்த தடவை அதற்கு நேர்மாறாக முடிவு கண்டு எழுச்சி பெற்றிருக்கிறது.
சென்னைக்கு நிகராக பெங்களூருவும் வலிமைமிக்க அணியாக திகழ்கிறது. இந்த சீசனில் தோல்வியே சந்திக்காத ஒரே அணி பெங்களூரு. லீக் சுற்றில் மும்பை, ஐதராபாத், கொல்கத்தா, ராஜஸ்தான் ஆகிய அணிகளை வீழ்த்தி கம்பீரமாக வலம் வருகிறது.
அதுவும் முந்தைய ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 178 ரன் இலக்கை விக்கெட் இழப்பின்றி எட்டிப்பிடித்ததும், அதில் இளம் வீரர் தேவ்தத் படிக்கல் சதம் விளாசியதும் கவனிக்கத்தக்க அம்சமாகும்.
தேவ்தத் படிக்கல், கேப்டன் விராட் கோலி, மேக்ஸ்வெல் (2 அரைசதத்துடன் 176 ரன்), டிவில்லியர்ஸ் ஆகியோர் சூப்பர் பார்மில் உள்ளனர். அவர்கள் தான் அந்த அணியின் ஆணிவேராக உள்ளனர்.
இவர்களை கட்டுப்படுத்துவதை பொறுத்தே எதிரணியின் வெற்றி வாய்ப்பு அமையும். பந்துவீச்சில் முகமது சிராஜ், கைல் ஜாமிசன், ஹர்ஷல் பட்டேல், வாஷிங்டன் சுந்தர் அந்த அணிக்கு நம்பிக்கை அளிக்கிறார்கள்.
மொத்தத்தில் சரிசம பலத்துடன் மோதும் இவ்விரு அணிகளில் யாருடைய வெற்றிப்பயணத்துக்கு முட்டுக்கட்டை விழப்போகிறது என்பதே இதில் சுவாரஸ்யமான எதிர்பார்ப்பாகும்.
இவ்விரு அணிகளும் இதுவரை 26 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 16-ல் சென்னையும், 9-ல் பெங்களூருவும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.
மற்றொரு ஆட்டம்
இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் டேவிட் வார்னர் தலைமையிலான ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி, ரிஷாப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொள்கிறது. நடப்பு தொடரில் சென்னையில் நடக்கப்போகும் கடைசி ஆட்டம் இதுவாகும்.
முதல் 3 ஆட்டங்களில் ெதாடர்ச்சியாக தோற்று விமர்சனங்களை சந்தித்த ஐதராபாத் அணி ஒரு வழியாக பஞ்சாப்பை தோற்கடித்து வெற்றிக்கணக்கை தொடங்கியது.
அதே உத்வேகத்துடன் அந்த அணியினர் களம் காணுவார்கள். டெல்லி அணி 4 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, ஒரு தோல்வியை சந்தித்துள்ளது. கடந்த ஆட்டத்தில் இதே மைதானத்தில் மும்பை இந்தியன்சை வீழ்த்தியதால் கூடுதல் உற்சாகத்துடன் இறங்குவார்கள்.
இது மெதுவான தன்மை கொண்ட ஆடுகளம் என்பது அறிந்த விஷயம். அதனால் டெல்லி அணியில் அஸ்வின், அமித் மிஸ்ரா, ஐதராபாத் அணியில் ரஷித்கான் ஆகியோரின் சுழல் ஜாலத்தை எதி்ாபார்க்கலாம்.
கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்து டெல்லி அணியுடன் இணைந்துள்ள சுழற்பந்து வீச்சாளர் அக்ஷர் பட்டேலுக்கு இன்றைய ஆட்டத்தில் வாய்ப்பு கிடைக்குமா? என்பது சந்தேகம் தான்.

No comments: