மாணவர்மகிமை வேலைத்திட்டத்தின் கீழ் அட்டப்பள்ளம் விநாயகர் வித்தியாலய மாணவர்களுக்கு முகக்கவசங்கள் வழங்கி வைப்பு

செ.துஜியந்தன் 


பாடசாலை மாணவர்களின் சுகாதாரப் பழக்க வழக்கங்களை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தை அம்பாறை  மாவட்ட அரச சார்பற்ற நிறுவனமான வெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பு முன்னெடுத்துள்ளது.

இதற்கமைய மாணவர் மகிமை எனும் வேலைத்திட்டத்தின் கீழ் அதிகஷ்டப் பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களின் பற்சுகாதாரம், கை கழுவுதல், தனிநபர் சுகாதார நடைமுறைகளை ஊக்குவித்தலுக்கான வசதியளித்தல் போன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நிந்தவூர் வெஸ்ட் ஒப் யங் அரசசார்பற்ற நிறுவனத்தின் தலைவர் ஐ.எம்.நிஸ்மி தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த வேலைத்திட்டத்திற்கமைய அட்டப்பள்ளம் விநாயகர் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் முகக்கவசங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

கொவிட்19 தொற்று பரவல் நிலையில் இருந்து மாணவர்களை பாதுகாக்கும் நோக்குடன் கே.என்.95 வகையை சேர்ந்த முக்ககவசங்கள் வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன் பாடசாலையில் உள்ள திறமை காட்டிய தேவையுடைய மாணவர்களை கௌரவிக்கும் வகையில் இரண்டாம் கட்ட கற்றல் உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டன. மேலும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் கடந்த வருடம்  சித்தியடைந்த மாணவி  பரிசில், நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

வேஸ்ட் ஒப் யங் அரச சார்பற்ற நிறவனத்தின் தவைலர் ஐ.எம்.நிஸ்மி தலைமையில் சுகாதாரவிதிமறைகளைப் பின்பற்றி  நடைபெற்ற இந் நிகழ்வில் அம்பாறை மாவட்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். அத்துடன் நிறுவனத்தின் செயலாளர் ஏ.புஹாது, பொருளாளர் எஸ்.ஏ.பாஸித் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
No comments: