இதுவரை ஒரு இலட்சத்து 60,148 பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது


கொரோனா தொற்றை தடுக்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு அமைவாக, இதுவரை ஒரு இலட்சத்து 60,148 பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட Oxford-AstraZeneca Covishield கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை கடந்த ஜனவரி 29ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

 இதனைத் தொடர்ந்து, 29ம் திகதி முதல் தொடர்ச்சியாக தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கபட்டு வருகின்றன.

இதற்கமைய, முப்படையினர், சுகாதார துறையினர், பொலிஸார் உள்ளிட்டவர்களுக்கு முதற்கட்டமாக இவ்வாறு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், நேற்று மாத்திரம்  3,838 பேருக்கு கொரொனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது

இதேவேளை, சீனாவில் தயாரிக்கப்பட்ட sinopharm கொரோனா தடுப்பூசி, அடுத்த வாரம் இலங்கைக்கு கொண்டுவரப்படும் என அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர், விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன அறிவித்துள்ளார்.

இதன்படி, குறித்த தடுப்பூசியைப் பயன்படுத்துவதற்கு, உரிய அனுமதியைப் பெற்றுக் கொள்வதற்கான ஆவணங்கள், தேசிய ஒளடத ஒழுங்குபடுத்தல் அதிகார சபைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக, அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, மூன்று இலட்சம் தடுப்பூசிகள், சீனாவினால் இலங்கைக்கு அன்பளிப்பளிப்பாக வழங்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இந்தியாவின் Bharat Biotech மற்றும் ரஷ்யாவின் sputnik ஆகிய கொரோனா தடுப்பூசிகளுக்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ள,  தேசிய ஒளடத ஒழுங்குபடுத்தல் அதிகார சபைக்கு உரிய ஆவணங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments: