1000 ரூபாய் சம்பள அதிகரிப்பை ஏற்க முடியாது – சிறுதோட்ட உரிமையாளர்கள் சங்கம்


பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாயாக அதிகரிக்க சம்பள நிர்ணய சபை மேற்கொண்ட தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என சிறுதோட்ட உரிமையாளர்கள் சங்கமும் தனியார் தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கமும் அறிவித்துள்ளன.

கடந்த தினம் கூடிய சம்பள நிர்ணய சபை, இறப்பர் மற்றும் தேயிலை துறைசார்ந்த பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களது அடிப்படை சம்பளத்தை 900 ரூபாயாகவும் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவை 100 ரூபாயாகவும் அதிகரிப்பதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியது.

இந்த நிலையில், சம்பள உயர்வு அதிகரிக்கப்படுவதானது, சிறுதோட்ட உற்பத்தியாளர்களையும் தனியார் தேயிலை தொழிற்சாலைகளை நடத்துகின்றவர்களையும் பெரிதும் பாதிக்கும் என்று குறித்த சங்கங்கள் தெரிவிக்கின்றன. எனவே இதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

அதேவேளை, சம்பள நிர்ணய சபையின் இந்த தீர்மானத்துக்கான ஆட்சேபனையை முன்வைக்கவிருப்பதாக பெருந்தோட்ட நிறுவனங்களது ஒன்றியமும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: