தப்பிச்சென்ற கொரோனா தொற்றாளர்களில் மற்றுமொருவர் கைது


பொலன்னறுவை – கல்லேல்ல கொரோனா சிகிச்சை நிலையத்திலிருந்து ஐவர் அண்மையில் தப்பிச்சென்ற நிலையில் அவர்களில் ஒருவர் மாதம்பை பகுதியில் கைது செய்யப்பட்டிருந்ததுடன், இன்று மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஆரச்சிக்கட்டு – ஆணைவிழுந்தான் பகுதியில் வைத்து 52 வயதான குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அந்நபர் தலைமறைவாக இருப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய மற்றுமொருவரும் கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தப்பிச் சென்ற ஏனைய மூவரை கைது செய்வதற்கான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும்,நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 22, 23, 26, 32 மற்றும் 52 வயதான  கைதிகள் ஐவரும் கொரோனா தொற்றுக்குள்ளாகி கல்லேல்ல கொரோனா சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை நிலையத்திலிருந்து கடந்த 31ம் திகதி தப்பிச்சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments: