ஒழுங்காக சபையை கொண்டு நடத்த முடியாவிட்டால் சபையை கலைத்து விடுங்கள் - காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் முஸ்தபா ஜலீல்

எஸ்.அஷ்ரப்கான்


பிரதேச சபையை மக்களுக்கு நன்மை பயக்கும் விதத்தில் கொண்டு செல்ல முடியாவிட்டால் இனவாதம் தலைக்கு மேலால் செல்வதனால் சபையை கலைத்துவிட்டு அரச அதிகாரியான பிரதேச சபை செயலாளரிடம் பிரதேச சபையை கையளித்துவிட்டு வீட்டுக்கு செல்வோம். அதுதான் எமது பிரதேச சபைக்கு இப்போதைய தீர்வாக அமையும் என காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் முஸ்தபா ஜலீல் தெரிவித்தார்.

மாதாந்த சபை அமர்வு பிரதேச சபை தவிசாளர் கி. ஜெயசிறில் தலைமையில் சபா மண்டபத்தில் நடைபெற்ற போது அங்கு உரையாற்றுகையிலையே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் பேசிய அவர்,

சபைக்கு வெளியே நடக்கும் பிரச்சினைகளை சபைக்குள் கொண்டுவந்து மக்களின் வரிப்பணத்தை வீணாக செலவு செய்து கொண்டு நேரத்தை வீணடிக்கும் பிரதேச சபை உறுப்பினர்கள் இனவாதமாக சிந்திக்காமல் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதை பற்றி சிந்திக்க முன்வரவேண்டும். சபைக்கு வெளியே நடக்கும் பிரச்சினைகளை தீர்க்க நீதிமன்றம், பொலிஸ் திணைக்களம் போன்ற எத்தனையோ அரச நிறுவனங்கள் இருக்கிறது.

இந்த தவிசாளர் கதிரை பலரையும் கண்டுள்ளது. கதிரைகள் யாருக்கும் நிரந்தரமில்லை. மாவடிப்பள்ளி பிரதான வீதியின் மின்விளக்குகள் அணைக்கப்பட்டு இருளாக இருக்கிறது. யானைகள் நடமாடும் பிரதேசமது. அது ஒன்றும் சாதாரண வீதியல்ல. பல லட்சம் மக்கள் பாவிக்கும் பிரதான வீதி. நிலத்தின் கீழால் செல்லும் வயரை வெட்டிவிட கூட இங்கு இருக்கும் சிலர் ஆயத்தமாக இருக்கிறார்கள். இது போல

எமது பிரதேச சபைக்கான உத்தியோகபூர்வ சமூக வலைத்தளம் இனவாதமாக செயற்படுகிறது. அரச சொத்தை வீணடித்து இவ்வாறு செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். எமது பிரதேச எல்லைகளில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள கடைத்தொகுதிகள் தமிழர், முஸ்லிம் என்ற பாகுபாடுகள் இல்லாமல் அகற்றப்பட வேண்டும். 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரின் உதவியை கொண்டு 30 க்கு மேற்பட்ட தமிழ் குடும்பங்களுக்கு குடிநீர், மின்சாரம், வாழ்வாதார உதவிகளை செய்துள்ளேன். எமது பிரதேசத்தில் தமிழர் முஸ்லிம் ஒற்றுமையை சீரழிக்க எந்த சக்திக்கும் இடமளிக்க முடியாது என்றார்.

No comments: