தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகள் சிங்கள பெரும்பான்மை மக்கள் மத்தியிலே பிரச்சாரம் செய்யப்பட வேண்டியது அவசியம்-மருதமுனையில் முன்னாள் அமைச்சர் பஷீர் வலியுறுத்து

எஸ்.அஷ்ரப்கான்


இந்நாட்டுக்கு தமிழ், முஸ்லிம் மக்கள் எதிரானவர்கள் அல்லர் என்கிற விடயம் நிரூபிக்கப்பட வேண்டிய அதே நேரத்தில் தமிழ், முஸ்லிம் மக்களின் அபிலாஷைகள் சிங்கள பெரும்பான்மை மக்கள் மத்தியில் அவசியம் பிரசாரம் செய்யப்பட வேண்டும் என்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும், உற்பத்தி திறன்கள் ஊக்குவிப்பு முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகு தாவூத் தெரிவித்தார்.

பன்னூல் ஆசிரியர், கவிஞர், சட்டத்தரணி அலறி றிபாஸ் எழுதிய துளி அல்லது துகள் கவிதை நூல் வெளியீட்டு விழா அல் மீஸான்  பௌண்டேசனின் ஏற்பாட்டில் தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் அம்ரிதா ஏயேமின் தலைமையில் மருதமுனை கலாசார மண்டபத்தில் சனிக்கிழமை காலை இடம்பெற்றது.

இதில்  இலக்கியவாதிகளான உமா வரதராஜன், மன்சூர் ஏ காதர், சிராஜ் மஸூர் போன்றோர் பேராளர்களாக பங்கேற்றனர். அண்மையில் உயிர் நீத்த எழுத்தாளர்களான டொமினிக் ஜீவா, நூறுல் ஹக் ஆகியோர் இங்கு நினைவு கூரப்பட்டனர்.

இந்நூல் வெளியீட்டு விழாவில் சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்டு பேசியபோது பஷீர் சேகு தாவூத் மேலும் தெரிவித்தவை வருமாறு

அரசியலை எழுத்தாளர்கள் மாற்ற முடியும் என்பதற்கு அண்மையில் அமெரிக்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல் சிறந்த முன்னுதாரணம் ஆகும். மேலோங்கி ய நிலையில் உள்ளதாக எல்லோரும் நினைத்திருந்த வெள்ளையின தேசியவாதம் படுதோல்வி அடைந்து வீழ்ந்து முற்போக்கான, சிறுபான்மை மக்களுக்கு சம பங்கு வழங்குகின்ற நிலைமை ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

பைடன் ஒரு மாற்றம். கலைஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் ஆகியோரே இம்மாற்றத்துக்கான திறவுகோல்களாக செயற்பட்டனர். இம்மாற்றத்துக்காக மக்களை தயார்ப்படுத்தினர். பைடனை மக்கள் மயப்படுத்தினர். அற்புதமான மாற்றம் கண் முன் தெரிகின்றது.

முஸ்லிம் வந்து குடியேற முடியாது என்கிற சட்ட ஏற்பாட்டை எதிர்த்து பைடன் கையெழுத்து இட்டு உள்ளார். அமெரிக்காவில் பிறக்காத பலரை முக்கியமான பல பதவிகளுக்கு நியமித்து உள்ளார். அதே போல பெண்களை நியமித்து உள்ளார். இவை எல்லாம் பெரிய மாற்றங்கள் ஆகும்.

இலங்கையில் பாரிய மாற்றமும், அரசியல் போக்கில் திருத்தமும் ஏற்படும் என்று நான் நம்புகின்றேன். அதற்கான பங்களிப்பை தமிழ், சிங்கள, ஆங்கில மொழிகளில் எழுதுகின்ற எழுத்தாளர்கள் வழங்க முடியும். தமிழ், முஸ்லிம் எழுத்தாளர்கள் காத்திரமான பங்களிப்பை வழங்க வேண்டும் என்று கேட்டு கொள்கின்றேன்.

குறிப்பாக  இந்நாட்டுக்கு தமிழ், முஸ்லிம் மக்கள் எதிரானவர்கள் அல்லர் என்கிற விடயம் நிரூபிக்கப்பட வேண்டும். அவ்வாறே  தமிழ், முஸ்லிம் மக்களின் அபிலாஷைகள் சிங்கள பெரும்பான்மை மக்கள் மத்தியில் அவசியம் பிரசாரம் செய்யப்பட வேண்டும்.

No comments: