ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட செயற்குழுக் கூட்டம் இன்று


ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட செயற்குழுக் கூட்டம் இன்று  முற்பகல் 10 மணிக்கு இடம்பெறவுள்ளது.

கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கட்சி தலைமையகமான ஸ்ரீகொத்தவில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.

கட்சியில் தற்போது வெற்றிடமாகவுள்ள பொதுச்செயலாளர் பதவி உள்ளிட்ட அதிகாரிகள் குழாமை நியமிப்பது தொடர்பாக இதன்போது விசேடமாக அவதானம் செலுத்தப்படவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஷமல் செனரத் தெரிவித்துள்ளார்.

பொதுச்செயலாளர் பதவிக்கு மேலதிகமாக, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர், பிரதி பொதுச் செயலாளர் மற்றும் உப செயலாளர் உள்ளிட்ட பதவிகளும் வெற்றிடமாகவுள்ளன.

இந்தநிலையில் இன்றைய செயற்குழு கூட்டத்தில் பெரும்பாலும் குறித்த பதவி வெற்றிடங்களுக்கான நியமனங்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்துள்ள தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, இதுவரை எவரும் பெயரிடப்பாத பின்னணியில், அது தொடர்பிலும் இன்றைய செயற்குழு கூட்டத்தில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: